

விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு விவசாயக் கடனை தள்ளுபடி செய்யுமா என்ற கேள்விகள் எழுந்துவருகின்றன.
இதுகுறித்து டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அருண் ஜேட்லி, "விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி ஒரு யோசனை மத்திய அரசிடம் இல்லவே இல்லை. மாநில அரசுகளின் விவசாயக் கடன் ரத்து அறிவிப்பு தொடர்பாக நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. நிதிப் பற்றாக்குறையை சீரமைப்பது உள்ளிட்டவற்றிலேயே மத்திய அரசு கவனம் இருக்கிறது.
ஏற்கெனவே மத்திய அரசின் நிலைப்பாட்டை நான் தெரிவித்துவிட்டேன். விவசாயக் கடன்களை ரத்து செய்யும் மாநில அரசுகள் அதற்கான நிதி ஆதாரங்களை அவர்களேதான் திரட்டிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இதற்குமேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை" என்றார்.