Published : 17 Feb 2016 03:10 PM
Last Updated : 17 Feb 2016 03:10 PM

தேசத் துரோக வழக்கு அச்சுறுத்தலால் தலைமறைவான உரிமைகள் போராளி ஹிமான்ஷு குமார்

சத்தீஸ்கர் மாநிலத்தின் தாண்டேவாடாவில் 18 ஆண்டுகள் காந்தி ஆசிரமம் நடத்திய பிறகு ஹிமான்ஷு குமார் என்ற மனித உரிமை போராளி தற்போது ‘தேசத் துரோக’ வழக்கு அச்சுறுத்தலால் சொந்த மாநிலத்தில் கால்வைக்க முடியாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குப் பேசிய அவர், சத்தீஸ்கர் போலீஸ் தன் மீது 100 புகார்களுக்கும் மேல் பதிவு செய்துள்ளனர், அதுவும் தேசத் துரோகப் புகாரும் அதில் உள்ளது என்றார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக அரசுக்கு எதிராக இவரது போராட்டம் தொடங்கியது எனலாம். அதாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மாவோயிஸ்ட்களை அடக்க குடிமக்களுக்கே ஆயுதம் வழங்கி உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சல்வா ஜுதும் காலக்கட்டத்தில் இவரது எதிர்ப்பு தொடங்கியது.

இவர் பல உண்மை அறியும் பணிகளை மேற்கொண்டார். அதாவது மாநில போலீசும், சல்வா ஜுதும் படையும் நக்சல்களை அழிக்கிறதா அல்லது அப்பாவி மக்களை அழிக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டார்.

2011-ம் ஆண்டு ஹிமான்ஷு குமார் சுமார் 519 போலி என்கவுண்டர் பட்டியல்களுடன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

“அப்போது கோர்ட், அனைத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு போலீஸாரால் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியது” என்றார் ஹிமான்ஷு. மேலும் மனித உரிமைகள் குழுக்களை எந்த அரசும் கருணையுடன் அணுகவில்லை என்றும் 2009-ல் தனது ஆசிரமத்தை இடித்துத் தரைமட்டமாக்கினர் என்றும் கூறினார் அவர்.

மாநில அரசுடன் மோதல் போக்கை உருவாக்கிக் கொள்வதற்கு முன்பாக ஹிமான்ஷு குமார் சமூகக் கல்வி, மற்றும் பழங்குடி பெண்கள் எப்படி கைப்பம்ப்களை பழுது பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டதோடு, குக்கிராமங்களுக்கு இலவசமாக மருந்துகளை அனுப்பிக் கொண்டிருந்தார்.

“எங்கள் இயக்கத்தில் 250 பேர் பணியாற்றி கொண்டிருந்தனர். அவர்கள் தற்போது வேலையின்றி உள்ளனர், அரசு எங்களது ஆசிரமத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது.

தற்போது ஜே.என்.யூ. விவகாரம் வெடித்துள்ளதையடுத்து, யார் தேசத் துரோகி, யார் தேசப்பற்றுடையவர்கள் என்பதெல்லாம் தனக்கு கவலையில்லை என்று கூறிய ஹிமான்ஷு, “பழங்குடி மக்கள் போலி குற்றச்சாட்டுகளில் சிறைகளில் தள்ளப்பட்ட போது ஒருவரும் அதை எதிர்த்து பேசக்கூட இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x