

காவி கொள்கைகளுக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து, இரண்டு ஜேஎன்யு மாணவர்களைத் தாக்கியதாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) இயக்கத்தினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக டெல்லி ராம்ஜாஸ் கல்லூரியில் உமர் காலித் பங்கேற்ற கருந்தரங்க நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவிக்கு ட்விட்டர் வாயிலாக பலாத்கார அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜேஎன்யுவில் காவி கொள்கைகளுக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.
அதில் கலந்துகொண்ட இரண்டு ஜேஎன்யு மாணவர்களைத் தாக்கியதாக, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) இயக்கத்தினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கிரோரி மால் கல்லூரியைச் சேர்ந்த பிரசாந்த் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் படிக்கும் விநாயக் சர்மா ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுகுறித்துக் காவல்துறை தரப்பில் கூறும்போது, ''இந்த சம்பவம் மாலை 5.30 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள், ஏபிவிபி அமைப்பினர் படேல் செஸ்ட் மருத்துவ நிறுவனத்தில் இருந்து தங்களைப் பின் தொடர்ந்ததாகவும், கால்சா கல்லூரி அருகே தங்களைத் தாக்கியதாகவும் கூறியுள்ளனர்.
அந்த வழியாகச் சென்ற காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து, மெளரிஸ் நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தாக்குதல் நடத்திய இருவர் மீதும் துன்புறுத்துதல் மற்றும் வன்முறை செயல்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினர்.
தாக்குதலுக்கு உள்ளான அமன் குமார், ''என்னுடைய கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்ட அவர்கள், பெல்ட் மூலம் நெரிக்க முயன்றனர். அத்தோடு கண்களைக் காயப்படுத்தி, தப்பிச் செல்ல முடியாத வகையில் அச்சுறுத்தினர்'' என்றார்.
ஏபிவிபி பதில்
தாக்குதலுக்கு உள்ளானவர் ஜேஎன்யு மாணவர் என்றும் அவருக்கு டெல்லி பல்கலைக்கழக மாணவர்களுடன் முன்விரோதம் இருந்ததாகவும் ஏபிவிபி கூறியுள்ளது. மேலும் ஏபிவிபி போர்வையில் வெளியாட்கள் நடத்திய இந்த வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.