

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டுக்கு ஒருவர் வீதம் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் சேர்ந்து நாட்டு நலனுக்காக பாடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இங்கு விரைவில் ராணுவ பயிற்சி முகாம் தொடங்கப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், தாடேபல்லிகூடத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ‘மிலிட்ரி மாதவரம்’ கிராமம். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த கிராம மக்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி உள்ளனர். முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போர், சீனா, பாகிஸ்தான் போர்களிலும் இந்த கிராம இளைஞர்கள் போர் புரிந்துள்ளனர்.
17-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இந்த கிராமம் உருவானதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஒடிசா, டெக்கான் பகுதிகளை ஆண்ட இந்த காலகட்டத்து அரசரான கஜபதி வம்சத்தைச் சேர்ந்த பூசபாட்டி மாதவ வர்மபிரம்மா எனும் அரசரால் இந்த கிராமத்துக்கு இப்பெயர் வந்தது.
இந்த கிராமத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள அருகொலனு என்ற ஊரில் கோட்டை கட்டப்பட்டது. பின்னர் வடக்கு ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ படையினருக்கு இந்த மிலிட்ரி மாதவரத்தில் விவசாய நிலங்கள், வீடுகள் கட்டித் தரப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
இதைத் தொடர்ந்து இந்த கிராம மக்கள் வீட்டுக்கு ஒருவர் வீதம் வழிவழியாக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். முதல் மற்றும் இரண்டாவது உலகப்போரில் இந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் 12 வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்.டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘அமர் ஜவான் ஜோதி’ என்ற நினைவுத் தூணை போல இந்த மிலிட்ரி மாதவரம் கிராமத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த கிராமத்தைச் சேர்ந்த 250 பேர் ராணுவத்தில் இணைந்து, ஜம்மு காஷ்மீர் எல்லையில் பணியாற்றி வருகின்றனர். விரைவில் இந்த கிராமத்தில் ராணுவ பயிற்சி மையம் நிறுவப்பட உள்ளது. இதற்காகபாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கார் அடிக்கல் நாட்டி உள்ளார்.
இந்த கிராமத்தின் தேச பக்தியே இதற்குக் காரணம் என்று இந்த கிராம மக்கள் பெருமையாகக் கூறி வருகின்றனர்.