Last Updated : 15 Dec, 2015 09:27 PM

 

Published : 15 Dec 2015 09:27 PM
Last Updated : 15 Dec 2015 09:27 PM

அருண் ஜேட்லியை காக்கவே இந்த சிபிஐ சோதனை: கேஜ்ரிவால் புதிய குற்றச்சாட்டு

தனது அலுவலகத்தில் சிபிஐ சோதனை மேற்கொண்டது குறித்து கூறிய கேஜ்ரிவால், அது அருண் ஜேட்லி தொடர்பான ஒரு கோப்பு குறித்த சோதனையே என்று புதிய குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு அருண் ஜேட்லி 14 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார். டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பான கோப்பு ஒன்று முதல்வர் அலுவலகத்தில் இருக்கிறது, அதனை எடுத்துச் செல்லவே இந்த சோதனை என்று கூறுகிறார் கேஜ்ரிவால்.

அதாவது, அரசியல்வாதியான முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் புகார் அளித்ததன் பேரில் டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் புகார் தொடர்வாக டெல்லி மாநில அரசு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. டிடிசிஏ நிர்வாகிகள் டெல்லி மைதானத்தில் ஒரு கட்டிடம் கட்டி அதன் ஒரு பகுதியை முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் விதிகளுக்குப் புறம்பாக குத்தகைக்கு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஊழல் நடைபெற்றதாகவும் புகார் எழுந்தது.

இது குறித்து கேஜ்ரிவால் கூறும்போது, “டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் கோப்பு ஒன்று உள்ளது, அதனை பறித்துச் செல்லவே சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார் பெயர் இதில் வெறும் சாக்குபோக்குக்காக பயன் படுத்தப்பட்டுள்ளது, உண்மையான இலக்கு நான் தான்.

ராஜேந்திர குமார் கல்வி இயக்குநராக, வாட் கமிஷனராக, ஐடி துறை தலைவராக 2007-14 ஆகிய ஆண்டுகளுக்கிடையே இருந்திருக்கும் போது சில ஒப்பந்தங்களை சாதகமான நிறுவனங்களுக்கு அளித்துள்ளார் என்றால் சிபிஐ எப்படி இந்தத் துறைகளை சோதனை நடத்தாமல் இருந்தது?

மேலும் முதல்வர் அலுவலகம் ஒரு மாதகாலம் வரையிலான கோப்புகளையே வைத்திருக்கும். முதல்வர் அலுவலகம் எப்படி 2007-ம் ஆண்டு கோப்பை வைத்திருக்க முடியும்?” என்று கேள்விக்கணைகளை அடுக்கி சிபிஐ சோதனையில் ஓட்டைகளை கண்டுபிடித்த கேஜ்ரிவால், முன்னாள் முதல்வர் ஷீலா திக்சித அமைச்சர்களைக் காக்கவே இந்த நடவடிக்கை. அவரது காலக்கட்டத்தில்தான் இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன.

கிரிக்கெட் சங்க விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி சாட்சியங்களை திரட்டி வருவதால் பிரதமர் தனது அமைச்சர் (அருண் ஜேட்லி) அம்பலப்படுத்தப்பட்டு விடுவாரா என்று அஞ்சியுள்ளார் என்று கடுமையாக சாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x