

ஊழியர்கள் வருங்கால வைப்பு ஓய்வூதிய (இபிஎப்) திட்டத்துக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி ஜனவரி 31, 2017-க்குள் இபிஎப் திட்டத்தில் ஆதார் எண் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.
இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் பின்வரும் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
இபிஎப் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஊழியர்களின் சம்பளத்தில் 1.16 சதவீதத்தை (அதிகபட்சமாக ரூ.6,500) மானியமாக மத்திய அரசு அளித்துவருகிறது. ஆதார் எண் இணைக்கப்படும் வரை இந்த மானியம் அளிக்கப்படாது.
மேலும் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகே மானியம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆதார் இல்லாதவர்கள் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டையைப் பெற மேற்கொண்ட விண்ணப்பத்தின் நகல் ஆகியவற்றை இபிஎப் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட ஆவணங்களோடு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் கையொப்பமிட்ட சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தையும் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இபிஎப் திட்டம் 1995-ல் 2.5 கோடிப் பயனாளிகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டதால், அவர்கள் தக்க பயனை அடைந்துள்ளனர்.
இபிஎப் திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் ரூ.1000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மேலும் ஓர் ஊழியர் குறைந்தபட்சம் 10 வருடம் பணிபுரிந்தபிறகே ஓய்வூதியம் பெற முடியும்.
இபிஎப் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் ஊழியர்களின் சம்பளத்தில் 1.16 சதவீதத்தை (அதிகபட்சமாக ரூ.6,500) மானியமாக மத்திய அரசு அளித்துவருகிறது. ஊழியர் சம்பளத்தில் 8.33 சதவீதம் இந்த ஓய்வூதியத்தில் சேரும்.
இபிஎப் திட்டத்தில் உறுப்பினராக இருக்கும் ஊழியர்கள் தானாகவே இபிஎப் திட்டத்தில் இணைந்துவிடும் வசதி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் தொழிற்சங்க செயலாளர் டி.எல்.சச்தேவ், ''எல்லாத் தொழிலாளர்களிடமும் ஆதார் அட்டை இல்லை. நாங்கள் அரசின் ஆதார் நடவடிக்கைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இபிஎப் திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைக்க குறைவான கால அவகாசமே அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் திருத்தம் செய்யப்பட வேண்டும்'' என்றார்.