

டெல்லியில் பெய்த திடீர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது குறித்து ஐஐடி மாணவர்கள் மத்தியில் நகைச்சுவை ததும்ப பேசினார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி.
ஜான் கெர்ரி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் ஒருபகுதியாக டெல்லி ஐஐடி மாணவர்கள் மத்தியில் அவர் புதன்கிழமை உரையாற்றினார்.
அப்போது அவர் அங்கு குழுமியிருந்த மாணவர்களிடம், நீங்கள் அனைவரும் காரில்தான் இங்கு வந்தீர்களா? இல்லை ஏதாவது மிதவை வாகனத்தில் இங்கு வந்தீர்களா? எனக் கேட்க அரங்கம் முழுவதும் சிரிப்பொலி எழுந்தது.
டெல்லி ஐஐடி வரும் வழியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிரம்பியிருந்ததால் அவர் இவ்வாறு கேட்டார்.
முன்னதாக, விமான நிலையத்திலிருந்து அவரது விடுதி அறைக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட அவர் ஒரு மணி நேரம் நடுவழியில் காத்திருந்தார்.
இதனால் அவர் தனது இன்றையை நிகழ்ச்சிகள் சிலவற்றை ஒத்தி வைத்தார். இருப்பினும், ஏற்கெனவே திட்டமிட்டபடி டெல்லி ஐஐடியில் மாணவர்களை மட்டும் சந்தித்தார்.