

வலுவான லோக்பால் மசோதா கோரி டிச.10 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். இம்முறை யாதவ்பாபா கோயிலில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 5-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், வலுவான லோக்பால் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இன்று அறிவித்துள்ள அண்ணாஹசாரே , வரும் குளிர் கால கூட்டத்தொடரிலேயே இந்த மசோதவை நிறைவேற்ற மத்திய அரசு தைரியத்துடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஊழல் தடுப்பு மசோதாவை நிறைவேற்றத் தவறிய மத்திய அரசு மீது தன் கடும் அதிருப்தியையும் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ.க்கு அவர் அளித்த பேட்டியில்: லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றாமல் மத்திய அரசு இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்தார்.
ஜன் லோக்பால் அமைப்பு நடத்திய தொடர் போராட்டம் காரணமாக கடந்த 2011- ஆம் ஆண்டு லோக்பால் மசோதா மக்களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.