

வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டாத கட்சிகளை அரசியலை விட்டு வெளியேற்ற வேண்டும் என நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் என பட்டியலிடப்பட்ட 255 அரசியல் கட்சிகளின் நிதி விவகாரத்தை ஆராயும்படி வருமான வரித்துறைக்கு அண்மையில் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற குழு இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2005 முதல் தேர்தலில் போட்டியிடாத பல்வேறு அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டது. அதில் 255 கட்சிகள் போட்டியிடாதவை என பட்டியலிட்டிருந்தது. கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிக்காகவே அந்த கட்சிகள் இயங்கி வருவதாக தேர்தல் ஆணையம் நம்புகிறது. ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இருந்தாலும், எந்தவொரு கட்சியின் பதிவையும் ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்படவில்லை.
இதை கருத்தில் கொண்டே வெறும் சலுகைகளை பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என நாடாளுமன்ற குழு பரிந்துரைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து சட்ட துறைக்கான நாடாளுமன்ற நிலை குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘அரசியல் கட்சிகளின் பதிவு விவகாரங்கள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும். அப்போது தான் தீவிர அரசியலில் குதிக்காத அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்கு தயக்கம் காட்டும். மேலும் அத்தகைய கட்சிகளின் பதிவு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தது.
நாடு முழுவதும் அங்கீகாரம் வழங்கப்படாத 1,780 அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. அதேசமயம் அவை அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.