

பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு கொண்டுவந்த மது விலக்கு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று 11,292 கிமீ தொலைவுக்கு உலகின் மிக நீளமான மனித சங்கிலி அமைக்கப்பட்டது. இதில் அனைத்துக்கட்சியினரும் பங்கேற்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில், பிற்பகல் 12.15 மணிக்கு வண்ணமயமான பலூன்களை பறக்கவிட்டு மனித சங்கிலியை தொடங்கி வைத்தார் முதல்வர் நிதிஷ் குமார். அப்போது, நிதிஷுடன் ஒரு பக்கம் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவும் மறு பக்கத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் விஜய் குமார் சவுத்ரியும் கைகோத்திருந்தனர்.
காந்தி மைதானத்தில் நிதிஷ், லாலு உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பிஹார் மாநில வரைபடத்தைப் போல நின்று மனித சங்கிலி அமைத்தனர். அதனுள் மது பாட்டில்களை தடை செய்தது போன்ற குறியீடுடனும் சங்கிலி அமைக்கப்பட்டது.
45 நிமிடங்கள் நீடித்த இந்த மனித சங்கிலி 1 மணிக்கு முடிந்தது. இதில், மாநிலம் முழுவதிலும் சுமார் 2 கோடி பேர் சொந்த விருப்பத்தின் பேரில் கலந்து கொண்டனர்.
சட்டமேலவை தலைவர் அவதேஷ் நாராயண் சிங், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான அசோக் சவுத்ரி, பிற அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் ஒருவரோடு ஒருவர் கைகளை கோத்து நின்றனர். பிஹாரின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மனித சங்கிலி கிளை கிளையாக பரவி காணப்பட்டது.
சிவான் பகுதியில், சுஷில் குமார் மோடி, மத்திய இணை அமைச்சர் ராம் கிருபாள் யாதவ், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பிரேம் குமார், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் உள்ளிட்ட பாஜகவினர் கைகோத்து நின்றனர்.
இந்து, முஸ்லிம், சீக்கிய, கிறிஸ்தவ மத பாரம்பரிய உடை அணிந்த 4 சிறுவர்கள் முதல்வர் நிதிஷ் மற்றும் லாலுவின் பக்கத்தில் நின்று மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.
இஸ்ரோ அமைப்பின் இரு செயற்கைக்கோள்கள் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு செயற்கைக்கோள், 4 விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள், 40 ட்ரோன் விமானங்கள் மூலமாக இந்த மனித சங்கிலி நிகழ்வு படம் எடுக்கப்பட்டது. இது உலகிலேயே மீக நீளமான மனித சங்கிலி என மாநில தலைமை செயலாளர் அஞ்சனி குமார் சிங் தெரிவித்தார்.
2004-ம் ஆண்டில் வங்கதேசத்தில் 1,050 கிமீ தொலைவுக்கு மனித சங்கிலி அமைக்கப்பட்டது. இதுதான் இதுவரையில் மிக நீளமான மனித சங்கிலி என்ற சாதனையை பெற்றிருந்தது. இது இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.