

மிகவும் அரிதான ‘பாம்பே ரத்த வகை’யைச் சேர்ந்த 4 யூனிட் ரத்தம், வங்கதேசத்தில் உள்ள இளைஞருக்காக மும்பையில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.
வங்கதேச தலைநகர் தாகாவில் கடந்த மே மாதம் 21-ம் தேதி முகமது கம்ருசமான் என்ற 25 வயது வாலிபர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், அவருக்கு நான்கு யூனிட் ரத்தம் தேவைப்பட்டது.
ஆனால், அவரின் ரத்தம், மிகவும் அரிய வகையான ‘பாம்பே ரத்த வகை’யைச் சேர்ந்தது. உலகிலேயே சில நூறு பேருக்கு மட்டுமே அந்த ரத்த வகை உள்ளது. அவர்களிலும் மிகச் சிலரே ரத்த தானம் செய்யக் கூடியவர்கள். 1952-ம் ஆண்டில் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரத்த வகை குறித்து பல ஆய்வகங்களே தெரிந்திருக்கவில்லை.
பாம்பே ரத்த வகையைப் பெற, இணைய தொடர்புகள் மூலமும், நேரடி தொடர்புகள் மூலமும் தீவிரமாக தேடிய தாகா மருத்துவர்கள் இறுதியில் மும்பையில் உள்ள ‘திங்க் பவுண்டேஷ’னை அடைந்தனர். அந்த அறக்கட்டளை மூலம், ஸ்வப்னா சாவந்த், கிருஷ்ணானந்த் கோரி, மேஹல் பெலேகர் மற்றும் பிரவீன் ஷிண்டே ஆகிய நான்கு பேரிடம் இருந்து 4 யூனிட் ரத்தம் பெறப்பட்டது.
இதைத்தொடர்ந்து, விபத்தில் பாதிக்கப்பட்ட முகமது கம்ருச மானின் உறவினர் துஹினுர் ஆலம் மும்பை வந்து, 4 யூனிட் ரத்தத்தை மருத்துவர்கள் உதவியுடன் பாதுகாப்பாக தாகாவுக்கு கொண்டுசென்றார். இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ‘ஐஸ் ஜெல்’ பைகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து, ரத்த யூனிட்டுகள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.