Last Updated : 22 Jun, 2017 11:34 AM

 

Published : 22 Jun 2017 11:34 AM
Last Updated : 22 Jun 2017 11:34 AM

காசநோயாளிகள் அரசாங்க நிதியுதவியைப் பெற இனி ஆதார் கட்டாயம்

அரசாங்கத்திடம் இருந்து நிதியுதவி பெற்றுவந்த காசநோயாளிகள், காசநோய் சிகிச்சை மையங்கள், சுகாதார ஊழியர்கள் இனியும் தொடர்ந்து அந்த நிதியுதவியைப் பெற ஆதார் அட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் ஆதார் தரவுப்பெட்டகத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், ஆதார் எண் இல்லை என்பதற்காக நோயாளிகளுக்கு நோய்க்கணிப்போ, சிகிச்சையோ மறுக்கப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சக மூத்த அதிகாரிசுனில் கபார்தே தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் தெரிவித்தார்.

இது குறித்த ஜூன் 16 அறிவிப்பாணையில், ‘திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் தனிநபர்கள் ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை இந்த புதிய அறிவிப்பாணை குறிக்கிறது. 2012-ம் ஆண்டு முதல் காசநோய் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகள், இணைய அடிப்படையிலான ஆப் நிக்‌ஷயில் பதிவு செய்து கொள்ள வேண்டிய தேவையிருந்தது. இதன் மூலமே நிதி ஆதாரம், சிகிச்சையின் பலன்கள், தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத்திட்டத்தில் தொடர்புடைய சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் ஆகியவற்றை அரசு தடம் காண முடியும்.

ஆதார் எண் இல்லாவிட்டால் சிகிச்சை மறுக்கப்படாது எனும் அதே வேளையில் இதற்கான ரொக்கப் பயன்களைப் பெற ஆதார் எண் இணைந்த வங்கிக்கணக்குகள் தற்போது அவசியமாக்கப்பட்டுள்ளது.

நடப்பு நடைமுறைகளின் படி பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் நேரடியாக குறுகிய கால சிகிச்சை பெற்று வரும் சுகாதார பணியாளர்களுக்கும் பண உதவிகளை அரசு வழங்கி வருகிறது. ஆனால் காசநோயை முற்றிலும் அகற்றும் லட்சியத்தில் பண உதவிகள் அனைத்து நோயாளிகளுக்கும் செல்லுமாறு வசதி செய்யப்படவுள்ளது. சிலர் இருமுறை பதிவு செய்து கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் ஆதார் எண் இருந்தால் ஒருவரே இருமுறை ஒரே சிகிச்சைக்கான பணப் பலன்களை அடைவதை தடுக்க முடியும். சிகிச்சை இலவசமாக இருந்தாலும் நோயாளிகள் தங்களுக்கான உணவுப் பழக்கவழக்கத்துக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்கும் பண உதவிகள் பெறுவதற்கு ஆதார் எண் தற்போது முக்கியமாகிறது.

சென்னை அரசு மருத்துவமனை இருதய மருத்துவத்துறை உதவி கண்காணிப்பாளர் வினோத் குமார் கூறும்போது, ஆதார் எண் இருந்தால் நோயாளிகள் நிலவரத்தை சரியாகத் தடம் காண முடியும், பாதியிலேயே சிகிசை விட்டு செலவோரையும் நாம் இனம் கண்டு தடுக்க முடியும்., என்றார்.

காசநோய் பாதிப்பு இந்தியாவில் அதிகமிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. 2015-ல் புதிய காசநோயினால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதாவது இந்தியாவில் ஒரு லட்சம் பேர்களில் 217 பேருக்கு காச நோய் உள்ளது. 2025-ல் காசநோயை இந்தியாவிலிருந்து அகற்ற அரசு உறுதி பூண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x