

மத்தியப் பிரதேச ரயில் குண்டு வெடிப்பு மற்றும் இதில் தொடர் புடைய தீவிரவாதி உத்தரப் பிரதேசத் தில் நடந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது குறித்து என்ஐஏ விசாரணை நடத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. அப்போது, சமீபத்தில் உயிரிழந்த மக்களவை முன்னாள் உறுப்பினர் ரபி ராய் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் ஜம்புவன்ட் தோடே, பி.சிவசங்கர் மற்றும் சையது சஹாபுதீன் ஆகியோருக்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ம.பி. சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இரண்டு நாட்களுக்கு முன்பு ம.பி. ரயில் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கருதப்படும் தீவிரவாதி சைபுல்லாவை உ.பி. போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். சைபுல்லாவின் உடலை அவரது தந்தை முகமது சர்தாஜ் வாங்க மறுத்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த நாட்டுக்கு விசுவாசமுடன் இல்லாத அவன் எப்படி என்னுடைய மகனாக முடியும்” என்றார். இவ்வாறு தெரிவித்த அவருக்கு அரசு சார்பில் பாராட்டுகிறேன்.
மேலும் இந்த வழக்கில் தொடர் புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் ம.பி.யிலும் 3 பேர் உ.பி.யிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மாநில போலீஸாரும் மத்திய அமைப்புகளும் இணைந்து சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
இதனால் தீவிரவாதிகளின் தாக்குதல் சதி முறியடிக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மகப்பேறு மசோதா தாக்கல்
அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை காலத்தை 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக அதிகரிப்பது தொடர்பான மசோதாவை மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். பின்னர் இதன் மீது விவாதம் நடைபெற்றது.
மாநிலங்களவை ஒத்திவைப்பு
மாநிலங்களவை நேற்று காலையில் கூடியதும், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி காலமான மாநிலங்களவை உறுப்பினர் ஹாஜி அப்துல் சலாமுக்கு (மணிப்பூர்) அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் முன்னாள் உறுப்பினர்கள் புட்டபகா ராதாகிருஷ்ணன், பி.சிவசங்கர், சையது சஹாபுதீன், மக்களவை முன்னாள் தலைவர் ரபி ராய் ஆகி யோரின் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவைத் தலைவர் ஹமீது அன்சாரி அனைவருக்கும் இரங்கல் தீர்மானம் வாசித்தார். பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.