

கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததையடுத்து, ஜெயலலிதா தரப்பினர் நாளை (புதன்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யவுள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் ஜெயலலிதா உட்பட 4 பேர் சார்பாக செய்யப்பட்ட மனுவை கர்நாடகா உயர் நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தை நாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா, "ஊழல் என்பது மனித உரிமை மீறல் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக நோக்கியிருப்பதால், தண்டனையை ரத்து செய்வதற்கோ, ஜாமீன் வழங்குவதற்கோ இந்த மனு பொருத்தமுடையதல்ல” என்று கூறி ஜாமீன் மனுவை நிராகரித்ததோடு, தண்டனை ரத்தும் செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தார்.
இது குறித்து பெயர் கூற விருப்பப்படாத ஜெயலலிதா சார்பு வழக்கறிஞர் ஒருவர், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும்போது, “மேல் முறையீடு செய்வதற்கு ஏற்ப கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவு குறித்த அதிகாரபூர்வ நகலைப் பெற காத்திருக்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் நாளை மனு செய்ய தயாராகவே இருக்கிறோம்” என்றார்.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் செய்யப்படும் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போதும் ராம் ஜெத்மலானி மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சுஷில் குமார் ஆகியோரை நாடியிருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.