

மத்தியப் பிரதேசத்தில் போபால் உஜ்ஜைன் இடையிலான பாசஞ்சர் ரயிலில் நேற்று குண்டு வெடித்ததில் 10 பயணிகள் காயம் அடைந்தனர்.
இது தீவிரவாத தாக்குதல் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் பூபேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்த ரயில் நேற்று காலை போபாலில் இருந்து உஜ்ஜைன் நோக்கிச் செல்லும்போது, ஜப்டி என்ற ரயில் நிலையத்துக்கு அருகில் பொதுப் பெட்டியில் குண்டு வெடித்தது.
இதில் ரயிலின் கூரை சேதம் அடைந்தது. மேலும் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இதில் 10 பயணிகள் காயம் அடைந் தனர். இவர்களில் படுகாயம் அடைந்த இருவர் போபால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு வெடி குண்டு நிபுணர்கள் விரைந்தனர். குண்டுவெடிப்பின் தன்மை மற்றும் காரணம் குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்தூர் ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஜிஜேந்திர குமார் கூறும்போது, “சேதம் அடைந்த 2 பெட்டிகள் கழற்றப்பட்டு, ரயில் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. சேதம் அடைந்த பெட்டிகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, குண்டுவெடிப்பு தொடர்பான கூடுதல் விவரம் தெரியவரும்” என்றார்.
இதனிடையே குண்டுவெடிப் பில் தொடர்புடைய தீவிரவாதி ஒருவர், உ.பி.யின் லக்னோ நகரில் பதுங்கியிருப்பதாக அம்மாநில போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து லக்னோ நகரின் ககோரி பகுதியில் உள்ள ஒரு வீட்டை பயங்கரவாத எதிர்ப்பு போலீஸ் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது வீட்டில் பதுங்கியிருந்த நபருக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக மாநில டிஜிபி ஜாவேத் அகமது கூறும்போது, “வீட்டில் பதுங்கியுள்ள நபரை உயிருடன் பிடிக்க முயன்று வரு கிறோம். எனவே அவரை சரண் அடையுமாறு வற்புறுத்தி வரு கிறோம். கான்பூரிலும் ஒருவரை பிடித்து விசாரித்து வருகிறோம். என்றாலும் விசாரணைக்கு பிறகே உஜ்ஜைன் குண்டுவெடிப்பில் இவர்களுக்கு தொடர்புள்ளதா என தெரியவரும் என்றார்.