

நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட லோக்பால் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டதற்கு, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், "நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைக்கிறேன். இம்மசோதா வரலாற்று சிறப்பு வாய்ந்தது." என்றார்.
மேலும், இம்மசோதா நிறைவேற்றப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறுகையில், இம்மசோதா நிறைவேற்றப்பட்டது மிகப்பெரிய வெற்றி என்றும், ஊழலை ஒழிக்க மேலும் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
"ஊழலை ஒழிக்க ஒரு மசோதா போதாது. அதனை முற்றிலும் ஒழிக்க நிலுவையிலுள்ள ஏழு மசோதாக்களும் நிறைவேற்றப்பட வேண்டும்" என்று கூறினார்.
நீதித்துறையின் தரம் மற்றும் நம்பகத்தன்மை, ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
முன்னதாக, மக்களவை விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு அரசின் ஊழலுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்ற குளிர்கால கூட்டத்தொடரின் கால அவகாசத்தை நீட்டிக்க கோரியுள்ளார்.