

நாளை (21-ம் தேதி) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் யோகா குரு ராம்தேவ் தலைமையில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெறும். இதில், 3,000-க்கும் மேற்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட துணை ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
ஜுன் 21-ம் தேதி (நாளை) யோகா தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகளை மத்தியில் அரசு ஏற்பாடு செய்துள்ளது. சண்டீகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி உள்பட அனைத்து மாநில தலைநகரங்கள், முக்கிய நகரங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதில், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, இந்தோ திபெத்திய எல்லைப்படை மற்றும் சஷாஸ்ட்ரா சீமா பால் ஆகியவற்றைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பாதுகாப்புப் பணியில் உள்ள துணை ராணுவத்தினருக்காக ஜோத்பூரில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யோகா குரு ராம்தேவ் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3,000 பேர் பங்கேற்கின்றனர்.
சண்டீகர் நிகழ்ச்சியில் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையைச் சேர்ந்த 2,000 வீரர்களும், டெல்லி கன்னாட்பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் நடைபெறும் விழாவில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படைப் பிரிவினரும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.