

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றம் இரு அவைகளும் 4-வது நாளாக இன்றும் முடங்கியது.
இன்று காலை அவை கூடிய போது, கச்சத்தீவு, தெலங்கானா விவகாரம், உத்தரப்பிரதேசத்தில் முசாபர் நகர் நிவாரண முகாம்களில் குழந்தைகள் இறந்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் இரு அவைகளும் முதலில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் நாடாளுமன்றம் மீண்டும் கூடிய போதும் அமளி தொடர்ந்ததால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து 2 மணிக்கு அவை கூடிய போதும் அவையில் கூச்சல் , குழப்பம் நீடித்ததால் மாநிலங்களவையும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து 4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 5-ஆம் தேதியன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினம் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அடுத்த நாள் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதி.
சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் திங்கள் கிழமை மீண்டும் கூடியது நாடாளுமன்றம். ஆனால், இன்று வரை 4-வது நாளாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.