

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள லத்தூரில் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீரை வீணாக்கிய 3 அதிகாரிகளின் சம்பள உயர்வை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் கடும் வறட்சி நிலவுகிறது. ரயில் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் இன்றி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, 6 மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி லத்தூர் மக்களுக்கு விநியோகிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி 6 மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது. தொட்டிகள் நிரம்பியதை கவனிக்காமல் விட்டுவிட்டனர். அதனால், 6 தொட்டிகளிலும் தண்ணீர் நிரம்பி 20 நிமிடங்கள் வழிந்தோடியது. தகவல் அறிந்த பின்னர் தாமதமாக தொட்டிகளுக்கு தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டது. அதற்குள் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பாண்டுரங்க போல் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில், லத்தூர் மாநகராட்சி குடிநீர் விநியோகத் துறை அதிகாரி ஒருவர் அவருக்கு கீழ் பணியாற்றும் 2 அதிகாரிகளின் கவனக்குறைவே தண்ணீர் வீணானதற்கு காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேருக்கும் சம்பள உயர்வை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார். லத்தூர் மாநகராட்சி தலைவராக மாவட்ட ஆட்சியர் பாண்டுரங் கூடுதல் பொறுப்பு வகிப்ப தால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
‘‘வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் 1.5 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி உள்ளது. அந்த தண்ணீர் சேமிக்கப்பட்டிருந்தால், தாகத்தில் தவிக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்குப் பயன்பட்டிருக்கும். இந்த நடவடிக்கை மற்றவர்களுக்கு கடும் எச்சரிக்கையாக இருக்கும்’’ என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.