

பிரதமர் நரேந்திர மோடி தனது 66-வது பிறந்தநாளை சொந்த மாநிலமான குஜராத்தில் கொண்டாடவுள்ளார். குறிப்பாக அன்று தனது தாயாரிடம் ஆசி பெறுவது, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடுவது என நேரத்தைச் செலவிடவுள்ளார்.
குருநாதர் சுவாமிநாராயண் பிரமுக்சுவாமி மகராஜ் உயிரிழந்ததால் அவருக்கு அஞ்சலி செலுத்தவும், சவுராஷ்டிரா பகுதியில் நீர்பாசன திட்டத்தை துவக்கி வைக்கவும் என பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்துக்கு கடந்த மாதம் இருமுறை சுற்றுப்பயணம் செய்தார்.
இந்நிலையில் வரும் 17-ம் தேதி 66-வது பிறந்தநாளை கொண்டாடவிருப்பதால் 3-வது முறையாக அவர் தனது சொந்த மாநிலமான குஜராத்துக்குச் செல்லவுள்ளார்.
இது குறித்து குஜராத் மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் பங்கஜ் பாண்டியா கூறும்போது, ‘‘வரும் 17-ம் தேதி டெல்லியில் இருந்து அகமதாபாத் தரையிறங்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து நேரடியாக காந்திநகரில் வசிக்கும் தனது தாயார் ஹிர்பா மற்றும் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக செல்கிறார்.
தாயாரிடம் ஆசி பெற்ற பின், பழங்குடியின மாவட்டமான தஹோத்துக்கு சென்று நீர்பாசன திட்டத்தைத் துவக்கி வைத்கிறார். இதைத் தொடர்ந்து நடக்கும் பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசவுள்ளார்’’ என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு பின் நவ்சரிக்கு சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கும் பொதுமக்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இடஒதுக்கீடு கேட்டு படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டம், பசு இறைச்சி விவகாரத்தால் உனாவில் தலித் சமூகத்தினர் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றால் அம்மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு சற்று சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.