மாதம் ஒரு புத்தகம் வாங்குவதே தமிழ் பணியாற்றுவோருக்கு செய்யும் உயர்ந்த மரியாதை: கம்பன் விழாவில் ப.சிதம்பரம் கருத்து

மாதம் ஒரு புத்தகம் வாங்குவதே தமிழ் பணியாற்றுவோருக்கு செய்யும் உயர்ந்த மரியாதை: கம்பன் விழாவில் ப.சிதம்பரம் கருத்து
Updated on
2 min read

மாதம் ஒரு நூலையாவது வாங்குவது என்று முடிவெடுத்தால் அதுவே தமிழ்ப் பணியாற்றுவோருக்கு செய்யும் உயர்ந்த மரியாதையாக இருக்கும் என்று சென்னையில் நடந்த கம்பன் விழாவில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

சென்னையில் 42-ம் ஆண்டு கம்பன் விழா நேற்று நடந்தது.

இந்த விழாவுக்கு தலைமை வகித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலை, இலக்கியத் துறைகளில் புகழுடன் விளங்கும் 12 பேருக்கு பரிசுகளும், மாநில அளவிலான இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் வழங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழில் புதிய எழுத்துக்கும், புதிய சிந்தனைக்கும் பஞ்சமில்லை. புதிய எழுத்தாளர்களுக்குப் பஞ்சம் வராது. வாசகர்கள்தான் குறைவாக உள்ளனர். எழுத வேண்டும் என்ற உந்துதல் இருந்தால் எழுதலாம். எழுத்துதான் எனது பணி என்று மகிழ்ச்சியடையலாம். எழுத்தின் பலன் சமுதாயத்துக்குப் போய்ச் சேர வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக தமிழ்ப் பணியாற்றி வரும் அறிஞர்களுக்கு இங்கு விருதும், பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

மாதம் ஒரு நூலையாவது வாங்குவது என்று முடிவெடுத்தால் அதுவே தமிழ்ப் பணியாற்றுவோருக்கு செய்யும் உயர்ந்த மரியாதையாக இருக்கும்.

கம்பனின் மனிதநேயம் இயற்கையை, நம்மைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை, பகைவர்களைக்கூட நேசிக்கச் சொல்கிறது. மனிதநேயம் என்பது இன்றைய உலகில் மனிதனை மட்டும் நேசிப்பதாக இருக்கக் கூடாது. மனிதன் அல்லாத இனத்தையும் நேசிக்க வேண்டும். மனிதநேயம் என்பதற்கு விரிந்த பொருள் தர வேண்டும். பகைவனையும்கூட நேசிக்க வேண்டும். நண்பர்கள் கற்றுத்தராத பாடத்தை பகைவர்கள்தான் கற்றுத்தருவார்கள் என்று தலாய்லாமா கூறியதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.

முன்னதாக ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள கம்பர் விருதை சொ.சொ.மீ.சுந்தரத்துக்கும், பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசை இந்திரா பார்த்தசாரதிக்கும், நீதிபதி மு.மு.இஸ்மாயில் நினைவுப் பரிசை பெ.சிதம்பரநாதனுக்கும், கம்பன் பற்றிய சிறந்த நூலுக்கான அ.ச.ஞா.நினைவுப் பரிசை அ.கி.வரதராசனுக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வழங்கினார். மொத்தம் 15 பேருக்கு விருதும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன.

விழாவின் தொடக்கத்தில், சென்னை கம்பன் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வரவேற்புரையாற்றினார். மரபின்மைந்தன் முத்தையா எழுதிய ‘கம்பன் காட்டும் யோகியர்’ ஏவி.எம். அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் வெளியிட முதல் பிரதியை தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார்.

கம்பன் கழகமும், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து நடத்திய ‘காப்பியக் களஞ்சியம் கம்பனில் கட்டளைகள்’ தொடர் சொற்பொழிவின் ஒலிப்பேழைகளை தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் இயக்குநர் சிலம்பொலி செல்லப்பன் வெளியிட மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி பெற்றுக் கொண்டார்.

நிறைவில், ‘உளவியல் புலவன் கம்பன்’ என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி சிவம் சிறப்புரையாற்றினார்.

முன்னாள் பேராசிரியை சாரதா நம்பி ஆரூரன், நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். விழாவில், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in