

பிஹாரில் பள்ளி, கல்லூரிக்குச் செல்லாமலேயே ரூ. 5 லட்சம் கொடுத்தால் கல்விச் சான்றிதழை மிக எளிதாகப் பெற முடியும் என விசாரணையில் அம்பல மாகியுள்ளது.
பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சில மாணவர்கள், தங்களின் பாடப்பிரிவையே சரியாக உச்சரிக் கத் தெரியவில்லை. நிருபர்களின் கேள்விகளுக்கு தப்பும் தவறுமாக கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட மறு தேர்வில் அவர்களில் பெரும்பாலானவர்கள் தோல்வி யடைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கங்கா தேவி மகிளா கல்லூரியில் நேற்று முன்தினம் சோதனை நடத் தினர். முறைகேடு தொடர்பாக ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
அவர் அளித்த தகவலின்படி, “பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழுக் காக ரூ. 5 லட்சம் கொடுத்தால் போதும். அந்த மாணவர் பள்ளி அல்லது கல்லூரி செல்லவோ, மாணவராக பதிவு செய்திருக்கவோ கூட தேவையில்லை. அவருக்கு உடனடியாக சான்றிதழ் அளிக்கப் பட்டு விடும்” என தெரிய வந்துள்ளது.
இந்த பெரும் முறைகேட்டின் முக்கிய மூளையாகக் கருதப்படும் பிஹார் பள்ளி தேர்வு வாரிய முன்னாள் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் சிங், அவரது மனைவியும் கங்காதேவி மகிளா கல்லூரி முதல்வருமான உஷா சின்ஹா ஆகியோர் கைது செய்யப் படவில்லை.
கைது ஆணை
இதனிடையே, பிஹார் பள்ளித் தேர்வு வாரிய முன்னாள் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் சிங், அவரது மனைவியும் கங்கா தேவி கல்லூரி முதல்வருமான உஷா சின்ஹா ஆகியோரைக் கைது செய்ய நீதிமன்றம் கைது ஆணை நேற்று பிறப்பித்துள்ளது.
பாட்னா தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஓம் பிரகாஷ், காவல் துறையின் கோரிக்கையை ஏற்று இந்த ஆணையைப் பிறப் பித்தார்.