

மத்திய நிதியமைச்சர் அருஜேட்லிக்கு பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக குடியரசு மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோகர் பாரிக்கர், கோவா மாநில முதல்வராக பதவியேற்பதால் தனது பாதுகாப்பு அமைச்சர் பதவியை இன்று (திங்கள்கிழமை) காலை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சகம் கூடுதல் பொறுப்பு நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியன.
இந்த நிலையில் மனோகர் பாரிக்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று (திங்கட்கிழமை) ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம், கூடுதல் பொறுப்பாக அருண்ஜேட்லிக்கு வழங்கப்பட்டுள்ளதாக குடியரசு மாளிகை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது.
பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து நாளை கோவா முதல்வராக பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்:
பாதுகாப்பு அமைச்சக கூடுதல் பொறுப்பு ஜேட்லியிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரத்திலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி, மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படும்.
பாஜக ஆளும் மாநிலங்களிலிருந்து ஒரு முதல்வர் டெல்லிக்கு வரவழைக்கப்படுவார். பாஜக மத்திய குழுவில் உள்ள மூத்த பொதுச் செயலாளர் ஒருவர் அந்த மாநிலத்தின் முதல்வராக அனுப்பப்படுவார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் நிறைவுபெற்ற பின்னர், மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது" எனத் தெரிகிறது.
மோடி பலம்:
"உத்தரப் பிரதேச தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் மோடியின் பிடி வலுவடைந்துள்ளதால் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து சக்தி வாய்ந்த முதல்வரை டெல்லி தலைமை அழைத்தாலும்கூட நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை" என பாஜக தலைமை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.