Published : 16 Oct 2014 03:43 PM
Last Updated : 16 Oct 2014 03:43 PM

இந்தியாவை எவரும் எச்சரிக்க முடியாது: எல்லை விவகாரத்தில் ராஜ்நாத் உறுதி

இந்தியாவை எவரும் எச்சரிக்க முடியாது என இந்திய - சீன எல்லை விவகாரம் தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

அருணாசலப்பிரதேசத்தில் மக்மோகன் எல்லைக் கோடு நெடுகிலும் சாலை அமைக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எல்லைப் பிரச்சினையில் இறுதித் தீர்வுக்கு வருவதற்கு முன், தற்போதுள்ள நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில் இந்தியா எந்தவொரு நடவடிக்கை யிலும் ஈடுபடாது என நம்புகிறோம் என்று சீனா கூறியிருந்தது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "இத்திட்டம் தொடர்பான அறிவிப்பை நாங்கள் உறுதிசெய்ய வேண்டியுள்ளது. சீனா – இந்தியா இடையிலான எல்லைப் பிரச்சினை காலனி ஆதிக்க காலத்தில் விட்டுச் செல்லப்பட்டது. இந்தப் பிரச்சினையை நாங்கள் உரிய முறையில் தீர்க்க வேண்டியுள்ளது" என கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றின்போது செய்தியாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், "இந்தியா மிகவும் வலிமையான நாடு. இந்தியாவை எவரும் எச்சரிக்க முடியாது. எல்லையில் கட்டுமானப் பணிகளை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும்" என்றார்.

கடந்த செவ்வாய்கிழமையன்று இந்திய - சீன எல்லைக்கு உட்பட்ட 3,488 கி.மீ தூர பகுதியில் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார். சீன ஊடுருவல்களை தடுப்பது குறித்தும் அவர் ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x