

விவிஐபிக்களுக்கான ஹெலி காப்டர்கள் வாங்குவதில் நடந்த பேரத்தின்போது சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கிய பிரிட்டன் இடைதரகர் கிறிஸ்டியன் மிச்சேல் ஜேம்ஸின் இரு இந்திய கூட்டாளிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது விவிஐபிக்கள் பயன்பாட்டுக்காக இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறு வனத்திடம் இருந்து 12 ஹெலி காப்டர்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு அப்போதைய இந்திய விமானப் படை தளபதி எஸ்.பி.தியாகி பல கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது அமலாக்கத் துறையும், சிபிஐயும் வழக்குப் பதிவு செய்தது. மேலும் இடைத்தரகர்களாக செயல்பட்ட கார்லோ கெரோஸா, கைடோ ஹஸ்கே, கிறிஸ்டியன் மிச்சேல் ஜேம்ஸ் ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டு, அவர்களுக்கு எதிராக இன்டர்போல் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
குறிப்பாக அகஸ்டாவெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இடைதரகரான ஜேம்ஸ் ரூ.225 கோடி பணம் பெற்றதும், அதனை துபாய் வழியாக தனது இந்திய கூட்டாளிகள் ஆர்.கே.நந்தா மற்றும் ஜே.பி.சுப்ரமணியம் நடத்தும் நிறுவனத் துக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரிட்டனில் உள்ள ஜேம்ஸை நாடு கடத்துவதற்கான நடவடிக்கை களில் அமலாக்கத்துறை ஈடுபட்டது.
மேலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குற்றப் பத்திரிகைக்கு இணையான 1,300 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அமலாக் கத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
அதன் அடிப்படையில் ஜேம்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடி ஆணை பிறப்பித்திருந்தது.
இதைத் தொடர்ந்து கூட்டாளி களான ஆர்.கே.நந்தா, ஜே.பி.சுப்ர மணியம் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அர்விந்த் குமார், ஒரு லட்சம் ரூபாய் பிணைத் தொகை மற்றும் அதற்கு ஈடான உறுதிப் பத்திரத்தை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, ஜாமீன் வழங்கினார். அத்துடன் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் நாட்டைவிட்டு வெளியேற கூடாது என்றும், சாட்சி களை கலைப்பதற்கான நடவடிக் கையில் ஈடுபடக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தார்.