விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வர முடியாத பிடி ஆணை

விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வர முடியாத பிடி ஆணை
Updated on
1 min read

லண்டனில் உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி சுமீத் ஆனந்த் பிறப்பித்த இந்த உத்தரவை மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுப்பியுள்ளது.

2012-ம் ஆண்டு விஜய் மல்லையா அளித்த காசோலை மீது பணம் இல்லாததால் அது திரும்பியது. இதையடுத்து அவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு பல முறை உத்தரவு பிறப்பித்தும் விஜய் மல்லையா நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்க உரிய அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு தற்போது வெளியுறவு அமைச்சகம் மூலம் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சர்வதேச இந்தியாரகாந்தி விமான நிலையத்துக்கு மல்லையாவுக்குச் சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அளிக்க வேண்டிய தொகைக்கு ரூ. 1 கோடிக்கான காசோலை அளித்தது. பிப்ரவரி 22, 2012-ல் அளிக்கப்பட்ட இந்த காசோலை போதிய நிதி இல்லாமல் திரும்பியது. இதையடுத்து 2012ம் ஆண்டு ஜூன் மாதம் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது. மொத்தம் ரூ. 7.5 கோடி மதிப்பிலான நிலுவைத் தொகை அளிக்கத் தவறிய விஜய் மல்லையா மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்திரா காந்தி விமான நிலையத்தின் சேவையை கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் பயன்படுத்திக் கொண்டதற்காக இந்தத் தொகை அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in