கோஷ்டி மோதலால் பதற்றம்: பெங்களூருவில் ரவுடி சுட்டுக்கொலை - 2 ரவுடிகளை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்

கோஷ்டி மோதலால் பதற்றம்: பெங்களூருவில் ரவுடி சுட்டுக்கொலை - 2 ரவுடிகளை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்
Updated on
2 min read

பெங்களூருவில் இரு ரவுடி கோஷ்டிக‌ளுக்கு இடையே நடந்த பயங்கர‌ மோதலில் பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார். தப்பி ஓடிய இரு ரவுடிகளை போலீஸார் சுட்டுப்பிடித்தனர்.

பெங்களூருவின் மையத்தில் உள்ள‌ சிவாஜிநகரில் இஸ்லாமியர் களும், தமிழர்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்குள்ள பிராட்வே சாலையில் 24 மணி நேரமும் கடைகள் திறக்கப் பட்டிருப்பதால் ஆள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 9.30 மணியளவில் பிரபல ரவுடி பர்வேஸ் தனது கோஷ்டியை சேர்ந்த வாஜீத், ஆசீஃப் உள்ளிட் டோருடன் அங்கு வந்தார். அருகில் உள்ள‌ டீக்கடையில் பர்வேஷ் தனது கோஷ்டியினருடன் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண் டிருந்தார். இதையறிந்த மற்றொரு ரவுடியான சபீர் தனது கோஷ்டியை சேர்ந்த 6 பேருடன் அங்கு வந்தார்.

மாமூல் தகராறு

அப்போது சபீர், 'இந்த ரம்ஜானுக்கு பிறகு சிவாஜிநகரில் உள்ள கடைகள், பார்க்கிங் இடங் கள், கழிவறை கட்டணங்கள் எல்லாம் எனக்கு வந்து சேர வேண்டும். நான் தான் மாமூல் வசூலிப்பேன். இனிமேல் இந்த அதிகாரத்தை உனக்கு (பர்வேஸ்) விட்டுத்தர முடியாது''என கூறியுள் ளார். அதற்கு பர்வேஸ் எக்காரணம் கொண்டும் சிவாஜி நகரை விட்டுதர முடியாது என பதிலளித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சபீர், ''மாதத்துக்கு 2 லட்ச ரூபாய் கொடுத்து விடு. உன்னை விட்டு விடுகிறேன். இல்லையென்றால் கொன்றுவிடுவேன்'என பகிரங்க மாகவே மிரட்டியுள்ளார்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற் பட்டது. ஒரு கட்டத்தில் அங்கிருந்த உள்ளூர் அரசியல் பிரமுகர் குறுக்கிட்டு இரு கோஷ்டியினரை யும் சமாதானப்படுத்தினார். இருப் பினும் பர்வேஸ் மறைத்து வைத்திருந்த வாளினால் சபீர் கோஷ்டியினரை தாக்க முயற்சித் தார். அப்போது சபீர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பர்வேஸை நோக்கி 3 முறை சுட்டார். இதே போல பர்வேஸின் கோஷ்டியை சேர்ந்த வாஜீத், ஆசிஃப் ஆகிய இருவரையும் நோக்கி சுட்டார்.

அங்கிருந்து இருவரும் தப்பியோடியபோது, சபீர் கோஷ்டியினர் மோட்டார் பைக்கில் பின் தொடர்ந்து வந்து இருவரையும் வெட்டினர். படுகாயமடைந்த பர்வேஸ் உள்ளிட்ட மூவரையும் உடனடியாக அருகிலுள்ள பவுரிங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பர்வேஸை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பர்வேஸ் கோஷ்டியை சேர்ந்த வாஜீத், ஆசிஃப் ஆகிய இருவரையும் சிவாஜிநகர் போலீஸார் கைது செய்தனர்.

பழைய பெங்களூருவில் பதற்றம்

இந்த சம்பவம் பழைய பெங்களூரு பகுதிகளான சிவாஜி நகர், பிரேசர் டவுன், டேனரி சாலை ஆகிய இடங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியதை அடுத்து போலீஸார் ஆங்காங்கே செக் போஸ்ட் அமைத்தனர். பர்வேஸை சுட்டுக்கொன்ற சபீர் கோஷ்டி ஹெச்பிஆர். லே அவுட் பகுதியில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே கே.ஜி.ஹள்ளி காவல் ஆய்வாளர், நிவாஸ் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அதிகாலை 3 மணியளவில் சபீர் கோஷ்டியினர் தலைமை காவலர் பத்மநாபா உள்ளிட்ட போலீ ஸாரை தாக்கிவிட்டு, தப்பியோட முயன்றனர். அப்போது கே.ஜி.ஹள்ளி காவல் ஆய்வாளர் சீனிவாஸ், சபீர் மற்றும் அவரது கூட்டாளி பரக்கத் அலி ஆகிய இரு வரையும் முழங்காலில் சுட்டுப் பிடித்தார். காயமடைந்த இருவரும் தற்போது பி.ஆர். அம்பேத்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இந்த இரு ரவுடி கோஷ்டிகளின் மோதல் தொடர்பாக சிவாஜிநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெங்க ளூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தால் சிவாஜிநகர், பிரேசர் டவுன், டேனரி சாலை ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in