Published : 27 Sep 2013 02:28 PM
Last Updated : 27 Sep 2013 02:28 PM

அவசரச் சட்டம் முட்டாள்தனமான முடிவு: ராகுல் அதிரடி கருத்து

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு ஆதரவான அவசரச் சட்டம் முற்றிலும் முட்டாள்தனமானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முக்கிய முடிவுக்கு எதிரான கருத்தை, ராகுல் காந்தி கூறியிருப்பது, காங்கிரஸுக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியில் காங்கிரஸ் செய்தியாளர் கூட்டத்தில் திடீரென வந்து பேசத் தொடங்கிய ராகுல் காந்தி, "இந்த அவசரச் சட்டம் குறித்து என் கருத்தை இப்போது கூறுகிறேன். இது வடிகட்டிய முட்டாள்தனம். இதனைக் கிழித்து எறிய வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து.

அரசியல் காரணங்களுக்காக இத்தவறு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் இந்தத் தவறைச் செய்திருக்கிறது. பாஜக, சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் இந்தத் தவறைச் செய்திருக்கின்றன.

காங்கிரஸும், பிற அரசியல் கட்சிகளும் இந்த முட்டாள்தனத்தைத் தடுத்து நிறுத்த வேண்டிய நேரம் இது. காங்கிரஸோ, பாஜகவோ, நாட்டில் ஊழலை ஒழிக்கப் போராட விரும்பினால் இது போன்ற சின்னச்சின்ன சமரசங்களைத் தொடரக்கூடாது. ஏனெனில் இந்த விஷயத்தில் சமரசம் செய்து கொண்டால், பிறகு எல்லா விஷயங்களிலும் சமரசம் செய்ய நேரிடும்.

காங்கிரஸ் என்ன செய்கிறது, நமது அரசு என்ன செய்கிறது என்பதில் நான் அக்கறை கொண்டிருக்கிறேன். ஆகவேதான், குற்றப்பின்னணி கொண்டவர்களைப் பாதுகாக்கும் அவசர சட்ட விஷயத்தில் நமது அரசு தவறு செய்துவிட்டது என்கிறேன்" என்றார் ராகுல் காந்தி.

அப்போது உடன் இருந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மாக்கன், "ராகுல் காந்தி என்ன சொன்னாரோ அது, கட்சியின் கொள்கை" என்றார்.

அவசரச் சட்டம் குறித்த தனது கருத்துகளைத் தெரிவித்துவிட்டு, உடனடியாக செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார் ராகுல் காந்தி.

முன்னதாக, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவான சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நேற்று நேரில் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, அவசரச் சட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்க, மத்திய அமைச்சர்கள் ஷிண்டே மற்றும் சிபல் ஆகியோரை குடியரசுத் தலைவர் அழைத்தார்.

இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான அவசரத் தேவை என்ன என்று அமைச்சர்களிடம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கேட்டதாகத் தெரிகிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரதானமான அம்சத்தை ரத்து செய்து ஜூலை 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்ற பிரதிநிதிகளின் பதவிகள் உடனடியாகப் பறிக்கப்படும்; சிறையில் உள்ளவர்களும் தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை செயலிழக்கச் செய்யும் வகையிலான அவசரச் சட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் சில தினங்களுக்கு முன்பு கையெழுத்திட்டார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள் என பல்வேறு கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக சாடியிருப்பது கவனத்துக்குரியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x