Published : 03 Aug 2016 09:21 AM
Last Updated : 03 Aug 2016 09:21 AM

நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு தகவல்

நாடுமுழுவதும் மதுவிலக்கு கொண்டு வரும் திட்டமில்லை என மத்திய உள்துறை இணை யமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது பேசிய ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் கவுசலேந்திர குமார், “பிஹார் மாநில அரசு மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளது போன்று, நாடுமுழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வரும் எண்ணம் மத்திய அரசுக்கு உள்ளதா” எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த உள் துறை இணையமைச்சர் ஹன்ஸ் ராஜ் கங்காராம் ஆஹிர், “நாடு தழுவிய மதுவிலக்கைக் கொண்டு வரும் திட்டம் அரசுக்கு இல்லை. இது மாநில அரசு விவகாரம். எனவே, தேவையைப் பொறுத்து மதுவிலக்கைக் கொண்டு வருவது மாநில அரசுகளின் பொறுப்பு. உதாரணமாக குஜராத்தில் ஏற்கெனவே மதுவிலக்கு அமலில் உள்ளது. பல்வேறு மாநில அரசுகள் மதுவிலக்கை அமல் படுத்த முடிவு செய்தால், மத்திய அரசு அவைகளுக்கு நிச்சயம் உதவும். பிஹாரில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் உயிர்ப்பலி நிச்சயம் குறையும்” எனத் தெரிவித்தார்.

பிஜு ஜனதா தளம் உறுப்பினர் நாகேந்திர குமார் பிரதான் பேசும் போது, “நாடுதழுவிய மதுவிலக்கு நிச்சயம் தேவை. சுதந்திரம் பெறுவதற்கு முன்பு மகாத்மா காந்தி ஒரு முறை பேசும்போது தேச விடுதலையை விட மதுவிலக் குக்கே முதல் முன்னுரிமை என தெரிவித்துள்ளார். மதுவிலக் குக்கு ஆதரவாக தேசப்பிதாவே கருத்து தெரிவித்திருப்பதால் மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும்” என்றார்.

பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி கள்ளச்சாரயம் குடிப்ப தால் நாடு முழுவதும் ஏராளமான வர்கள் உயிரிழப்பது தொடர்பாக கவலை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x