Last Updated : 21 Jul, 2016 02:10 PM

 

Published : 21 Jul 2016 02:10 PM
Last Updated : 21 Jul 2016 02:10 PM

புர்ஹான் மரணத்தை தனித்து பார்க்க முடியாது: காஷ்மீர் கம்யூ. தலைவர் சிறப்பு பேட்டி

"காஷ்மீர் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி சார்பில் ஒரு சிறிய இரங்கல் குறிப்புகூட வெளியாகவில்லை. பிரதமர் இன்னமும் மவுனமாகவே இருக்கிறார்."

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ முகமது யூசுப் தாரிகமி 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் "காஷ்மீரிகள் கொலை செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மாநிலத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க ஓர் அரசியல் தீர்வு காண வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

காஷ்மீரின் தற்போதைய பதற்ற நிலை குறித்த உங்கள் கருத்து?

இது முற்றிலும் எதிர்பார்க்கப்படாத பதற்றம். போராட்டக்காரர்களின் அளவாக இருக்கட்டும், போராட்டத்தின் வீச்சாக இருக்கட்டும். இரண்டுமே சற்றும் எதிர்பார்க்கப்படாதது. ஆண்டாண்டு காலமாக தேக்கி வைக்கப்பட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் தற்போது காஷ்மீரில் நடைபெறும் வன்முறை. பெருங்கோபமும், தொடர் புறக்கணிப்பும் குவிந்து இத்தகைய போராட்டத்துக்கு மக்களைத் தூண்டியுள்ளன. இந்நிலையில், புர்ஹான் வானியின் மரணத்தை தணித்துப் பார்க்க முடியாது. இந்தியா பரந்துபட்ட பன்முகத்தன்மை கொண்ட மிகப் பெரிய தேசம். காஷ்மீர் ரத்தத்தால் தோய்ந்துள்ள நிலையில் இத்தேசம் குரல் கொடுக்க வேண்டாமா. அவ்வாறாக குரல் கொடுக்காமல் அமைதி காப்பது, தேசத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. நம்பிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. காஷ்மீரத்து இளைஞர்கள் கற்களை வீசி எறியும்போது ஆழமான உண்மையை தெரிவிக்கிறார்கள். தங்கள் குரல் கேட்கப்பட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். ஆனால், அதை யாரும் கேட்டபாடில்லை. கற்களுக்கு பதிலடியாக துப்பாக்கிகள் முழங்குகின்றன. அது துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல, ஏற்புடையதும் அல்ல.

மத்திய அரசின் போக்கை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

காஷ்மீர் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி சார்பில் ஒரு சிறிய இரங்கல் குறிப்புகூட வெளியாகவில்லை. பிரதமர் இன்னமும் மவுனமாகவே இருக்கிறார். முன்பு எப்போதும் இருந்திராத அளவு இப்போதுள்ள மத்திய அரசின் நிலைப்பாடு கனத்துப்போய் இருக்கிறது. காஷ்மீர் பிரச்சினை, மத்திய அரசினால் பாதுகாப்பு விவகாரமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால், இங்கு நிலவும் பிரச்சினை அரசியல் தன்மையுடையது.

மத்திய அரசு நிலைப்பாடு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடினமாக இருப்பதாகக் கூறுகிறீர்கள். அதை சற்றே விளக்க முடியுமா?

நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது ஒரு வாக்குறுதி அளித்தார். காஷ்மீர் மாநிலத்தில் நிறைவேற்றப்பட போகும் நலத்திட்டங்களுக்கு வானமே எல்லை என்றார். அடுத்ததாக வந்த தேவே கவுடா அரசு தனது குறைந்தபட்ச ஆதார திட்டத்தில் காஷ்மீருக்கு உச்சபட்ச சுயாட்சி வழங்கும் பிரிவைச் சேர்த்தது. பின்னர் 1998-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த வாஜ்பாயி அரசு, ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் காஷ்மீர் சுயாட்சி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் புறக்கணித்தது. ஆனால், லாகூர் பேருந்து பயணத்தில் வாஜ்பாய் இருந்தார். ஜனநாயகத்துக்கு வெளியே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பியவர்களுடனான பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு மனிதாபிமான அடிப்படையில் அப்பேச்சுவார்த்தை அமையும் என்றார் அடல் அவர்கள். எல்.கே.அத்வானி துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தபோது ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பினருடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர். அத்தகைய பேச்சுவார்த்தை ஏன் இப்போது மீண்டும் நடக்கக்கூடாது. அப்போது கே.சி.பாண்ட் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தராக இருந்தார். பின்னர் திலீப் பட்கோன்கர் தலைமையில் மூன்று நபர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. பாஜக உட்பட பல கட்சியின் பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்றக் குழு ஒன்று காஷ்மீர் பிரச்சினை குறித்து நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு பல தரப்பு மக்களிடம் கருத்துக் கேட்டது.

அப்படியென்றால் பாஜக ஆட்சி காஷ்மீர் பிரச்சினையை சரியாக அணுகவில்லை எனக் கூறுகிறீர்களா?

காங்கிரஸ் கட்சியும்கூட காஷ்மீருக்காக பெரிதாக ஏதும் செய்துவிடவில்லை. ஆனால், கட்சியில் காஷ்மீர் பற்றி ஏதாவது சலசலப்பாவது இருந்தது. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சி வந்தவுடன் சிறுபான்மையினர், சட்டப்பிரிவு 370 ஆகியனவற்றின் மீது அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?

அது மத பாகுபாடுடையதாகவும், அருவருப்பானதாகவும் இருக்கிறது. அப்படி ஒரு கொள்கை காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும்? கன்னியமான வாழ்க்கைக்கான நம்பிக்கைக் கீற்றை தேடும் அவர்களுக்கு எத்தகைய விடை பெற்றுத் தரும்? காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் ஒரே ஆயுதம், நிராயுதபாணிகளை, வெகுண்டெழுந்துள்ள மக்களை சுடுவதும், அடிப்பதுமாக இருக்கிறது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உடனடித் தேவை என எதை நீங்கள் குறிப்பிடுவீர்கள்?

முதலாவதாக, பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பிரச்சினை பற்றி பேச வேண்டும். காஷ்மீரிகள் மீது அரசுக்கு அக்கறை இருப்பதை உணர்த்த வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விரும்புவதாக தெரிவிக்க வேண்டும். காஷ்மீரிகள் இந்திய மக்கள் என்பதை பிரதமரே சொல்ல வேண்டும். ஏனெனில் பிரதமர் பேசினால் அது இந்ந்நாடு பேசுவதற்கு நிகராகும்.

இரண்டாவதாக, கற்களை வீசி போராடும் மக்களின் மார்பில் குறிவைத்து சுடுவது நியாயமா? இது, மனக்கசப்பை அதிகரிக்குமே தவிர வேறு ஒன்றும் செய்துவிடாது. அவர்கள் தூண்டிவிடப்படுகிறார்கள் என்று துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் சொல்வீர்களானால் அந்தத் தூண்டுதலுக்கு கட்டுப்பட்டே நீங்கள் துப்பாக்கிச் சூடு நடத்துகிறீர்கள் என்று அர்த்தமாகும்.

மூன்றாவதாக, பெல்லட் குண்டுகள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும். பெல்லட்டுகள் காஷ்மீரிகள் பலரது பார்வையைப் பறித்துள்ளது.

சமூக வலைத்தளங்களும் அவற்றை தூண்டுதலுக்காக பயன்படுத்துவதுமே பிரச்சினைகளுக்கு காரணம் என நீங்கள் நினைக்கிறீர்களா?

சமூக வலைத்தளங்கள் நிலைமையை தீவிரப்படுத்தலாம். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பிரச்சினைகளை நிச்சயமாக உருவாக்க முடியும. சில நேரங்களில் தவறான தகவல்களும், சில நேரங்களில் நல்ல விஷயங்களும் அவற்றில் பகிரப்படுகின்றன. ஆனால், பாஜக நாங்கள் இந்துதேசக் கொள்கைக்கு துணை நிற்பதாகக் கூறுகிறது. காஷ்மீருக்கு வெளியே காஷ்மீர் பிரச்சினை தொடர்பான தேசிய அணுகுமுறையும் இங்குள்ள பிரச்சினைகளுக்கு காரணம்.

பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து?

செய்தித்தாள்களுக்கு தடை விதித்தால் புரளிகள் பரவும்.

ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டுமா?

நிச்சயமாக. ஏன் திரும்பப் பெறக்கூடாது. இன்று, ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இன்று காஷ்மீரில் அதிகமாக இருப்பது உக்கிரமடைந்துள்ள இளைஞர்களே. தெருக்களில் போராடும் இளைஞர்களே. அவர்களை படைபலத்தால் கட்டுப்படுத்த நினைப்பதால் அவர்களை இன்னமும், அந்நியப்படுத்திவிடும்.

தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x