ரகசிய கேமரா மூலம் கண்டறிந்த மனைவி: பெங்களூரில் தன்பாலின உறவாளர் கைது

ரகசிய கேமரா மூலம் கண்டறிந்த மனைவி: பெங்களூரில் தன்பாலின உறவாளர் கைது
Updated on
1 min read

பெங்களூரில் தன்பாலின உறவில் ஈடுபட்டதாக மென் பொறியாளர் மீது அவரது மனைவி புகார் அளித்தார். வீடியோ ஆதாரத்தை அவர் அளித்ததைத் தொடர்ந்து போலீஸார் அவரது கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர்.

இது தொடர்பாக பெங்களூர் மாநகர காவல் துணை ஆணையர் சந்தீப் பாட்டீல் கூறியதாவது:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 32 வயதான கார்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.அரபு நாட்டில் பிறந்து வளர்ந்த இவர் தும்கூரைச் சேர்ந்த 31 வயதான அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பல் மருத்துவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினர் ம‌ல்லேஸ்வரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தனர். திருமணம் ஆனதில் இருந்து கார்த்தி தனது மனைவியுடன் தாம்பத்ய உறவு கொள்வதை தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவரது மனைவி விசாரித்த போது பதில் அளிக்கவும் மறுத்துவிட்டார். பின்னர் மனைவி தூங்கிய பிறகு நள்ளிரவில் வீடு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா தனது கணவரை மருத்துவரிடம் அழைத்து செல்ல முயன்றுள்ளார்.அதற்கு கார்த்தியும்,அவரது குடும் பத்தினரும் ஒப்புக் கொள்ளவில்லை.மேலும் அனிதாவை அவதூறாக பேசியுள்ளனர்.இதனால் அனிதா,'பாலுறவை கார்த்தி வெறுக்க என்ன காரணம்?' என துப்பறிய விரும்பியுள்ளார்.

கணவரின் அறையில், லிப்ஸ்டிக், பெண்கள் அணிவதைப் போன்ற வடி வமைப்பிலான உள்ளாடைகள் ஆகியவற்றைக் கணவரின் அறையில் பார்த்திருக்கிறார். மேலும், கார்த்தி தினமும் பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டுள்ளார். இதைப் பார்த்ததும் அனிதாவுக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது.

எனவே கணவரை கண்காணிக்க விரும்பிய அனிதா தனது வீட்டின் அனைத்து அறைகளிலும் ரகசிய கேமரா பொருத்தியுள்ளார்.இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு,தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.அங்கிருந்து வந்தபின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

ஏனென்றால் அவருடைய கணவர் கார்த்தி மற்றொரு ஆணுடன் தன்பாலின உறவில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.இது தொடர்பாக கணவரிடம் விசாரித்த போது, தனக்கு பெண்களுடன் பாலுறவு கொள்வதில் விருப்பம் இல்லை'என தெரிவித்துள்ளார்.

எனவே தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட கணவர் கார்த்தி மீதும், உண்மையை மறைத்த கணவரின் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மல்லேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் அதற்கு ஆதாரமாக ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட‌ வீடியோயையும் போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தி மீது இந்திய தண்டனை சட்டம் 377-ம் பிரிவின் கீழ், தன்பாலின உறவில் ஈடுபட்டதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்''என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in