

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்தநாகில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி அமோக வெற்றி பெற்றார். கடந்த 22-ம் தேதி அனந்தநாக் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (சனிக்கிழமை) எண்ணப்பட்டன.
ஆரம்பம் முதலே மெஹபூபா முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் பிடிபி வேட்பாளரான மெஹபூபா முப்தி 17.701 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 5,616 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
மொத்தம் பதிவான 28,500 வாக்குகளில் மெஹபூபா முப்தி 17,701 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 12,085 வாக்குகள் வித்தியாசத்தில் பிடிபி வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிடிபி கட்சிக்கு 6,000 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்தநாகில் பிடிபி-யின் பலம் அதிகரித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இடைத்தேர்தல் ஏன்?
கடந்த 2015-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவரான முஃப்தி முகமது சயீது அனந்தநாக் தொகுதியில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஜனவரி மாதம் உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாஜக - பிடிபிக்கு இடையே நீண்ட இழுபறி ஏற்பட்டது. பின்னர் மெஹபூபா முதல்வராக கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். காஷ்மீரின் முதல் பெண் முதல்வர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, ஒருவர் முதல்வராகப் பதவியேற்ற 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு உறுப்பினராக வெற்றி பெற வேண்டும் என்பது விதி. அதன்படி, இடைத்தேர்தல் நடைபெற்றது.
காங்கிரஸ் வேட்பாளர் வெளிநடப்பு:
வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் ஹிலால் அகமது ஷா வெளிநடப்புச் செய்ததால் வாக்கு எண்ணிக்கை 15 நிமிடங்கள் தடைபட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிலவற்றில் சீல் இல்லை என்றும் மெஹபூபாவுக்கு ஆதரவாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். இதனால் சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்ததையடுத்து மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.