Published : 15 Feb 2014 03:23 PM
Last Updated : 15 Feb 2014 03:23 PM

ஒற்றுமை, மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல்: சோனியா பேச்சு

நாட்டின் ஒற்றுமைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதை பாதுகாக்க காங்கிரஸை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார்.

பொய்யான வாக்குறுதிகளை கூறும் எதிர்க்கட்சியிடம் (பாஜக) மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்களவைத் தேர்தலையொட்டி கேரள மாநிலம் கொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் மாநாட்டில் சோனியா காந்தி சனிக்கிழமை பங்கேற்றார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: “நாட்டின் ஒற்றுமை, மதச்சார்பற்றத் தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயக அரசியல் ஆகிய கொள்கைகளுக்காக காங்கிரஸ் பாடுபட்டு வருகிறது. இந்த கொள்கைகளுக்கு இப்போது மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சிலர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில், இந்தியாவின் ஆன்மாவையே மாற்ற முயற்சிக்கின்றனர். சுதந்திரப் போராட்ட வீரர்கள் நமக்கு கற்றுத்தந்த பாரம்பரியமும் மதிப்பீடுகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

அனைவரையும் ஒற்றுமைப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியோ (பாஜக) மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது.

அமைதியான சூழலுக்காகப் பாடுபடும் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறீர்களா அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறீர்களா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஊழலுக்கு எதிராக பல்வேறு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். ஆனால், அவற்றை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

ஊழல் தொடர்பான புகார்கள் வந்தபோதெல்லாம், அது தொடர்பாக விசாரணை நடத்த காங்கிரஸ் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்களில் உள்ள பாஜக தலைமையிலான அரசுகள், ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்துள்ளன?

கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. அந்த மசோதாவை நிறைவேற்ற தொடர்ந்து முயற்சிப்போம்.

காலாவதியான கம்யூனிஸ்ட் கொள்கை

கேரளத்தில் உள்ள எதிர்க்கட்சி (கம்யூனிஸ்ட்) நடைமுறைக்கு ஒத்துவராத கொள்கைகளை வைத்துள்ளது. காலாவதியான கொள்கைகளை அக்கட்சி கடைப்பிடிக்கிறது. அக்கட்சிக்கு அகிம்சையில் நம்பிக்கை இல்லை. வன்முறை, கொலை போன்ற செயல்களின் மூலம் பிறருடனான கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொள்கின்றனர்.

மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருவதாக கூறும் அக்கட்சி, காங்கிரஸ் கூட்டணி அரசில் கொண்டு வரப்படும் திட்டங்கள் அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏழைகளுக்கு அக்கட்சி எந்த உதவியையும் செய்யவில்லை.

அதே சமயம் காங்கிரஸ் கட்சி, அகிம்சை வழியில் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. வளர்ச்சிக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் இறுதி மூச்சு உள்ளவரை பாடுபடுவோம்” என்றார் சோனியா காந்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x