நாடாளுமன்ற துளிகள்: தாய்ப்பால் வங்கிகளுக்கு தேசிய வழிகாட்டு விதிகள் வகுக்கப்படும் - சுகாதார இணை அமைச்சர், ஃபக்கன் சிங் குலஸ்தே

நாடாளுமன்ற துளிகள்:  தாய்ப்பால் வங்கிகளுக்கு  தேசிய வழிகாட்டு விதிகள் வகுக்கப்படும் - சுகாதார இணை அமைச்சர், ஃபக்கன் சிங் குலஸ்தே
Updated on
1 min read

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் அளித்த பதில்கள் வருமாறு:

மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி: குழந்தைகள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு போதிய சட்டவிதிகள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைப்பதை துளியும் சகித்துக்கொள்ள மாட்டோம். குழந்தைகள் பிச்சை எடுப்பதை தடுப்பதற்கான செயல்திட்டம் அடுத்த மாதத்திற்குள் வகுக்கப்படும். சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுக்க 700 தொண்டு நிறுவனங்ளுடன் சேர்ந்து சிறப்புத் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்பான புகார்களுக்கு ஹெல்ப் லைன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாதமும் சுமார் 4 லட்சம் அழைப்புகள் வருகின்றன. இப்புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சுகாதார இணை அமைச்சர் ஃபக்கன் சிங் குலஸ்தே: அரசு மருத்துவர்கள் தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் பணிபுரிவதை மத்திய அரசு ஊக்குவிக்கும். இப்பகுதிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிவோருக்கு மருத்துவ உயர் படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க திட்டமிட்டுள்ளோம். படிப்புக்குப் பிறகு 3 ஆண்டுகள் அதே பகுதியில் இவர்கள் பணிபுரிய வேண்டும். இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வர பரிந்துரை செய்துள்ளோம். இந்தியாவில் அரசு சார்பில் தாய்ப்பால் வங்கி எதுவும் நடத்தப்படவில்லை. என்றாலும் தாய்ப்பால் வங்கிகள் குறித்து தேசிய வழிகாட்டு விதிகளை மத்திய அரசு வகுத்து வருகிறது.

பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி: தேசியப் பாதுகாப்பு, அரசியல் விவகாரம் அல்ல. இதனை அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் விவகாரமாக கருதக் கூடாது. தேசப் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள பாதுகாப்பு படைகள் முழுவதும் தயார் நிலையில் உள்ளன. ராணுவத் தளவாட கொள்முதல் நடைமுறைகளை மத்திய அரசு விரைவுபடுத்தி வருகிறது. பாதுகாப்பு படைகளின் தேவைகளைப் பொறுத்தவரை எவ்வித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in