

ஒரு காலத்தில் தேர்தல் என்றால், பிரச்சார மேடைகளைத் தாண்டி அரசியல்வாதிகள் யுத்தம் நடத்தும் இடம் சுவர்கள். இப்போது இணையம் பிரமாண்டமான மேடையாகி விட்டது. இணையத்தில் - குறிப்பாக பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங் களில் – எல்லாக் கட்சிகளுமே களம் இறங்கி விட்டாலும், நாட்டின் பிரதான கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க-வும் ஒரு போரையே நடத்துகின்றன.
தங்கள் கட்சியின் வாக்குறுதிகளையும் எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனங்களையும் முழு வீச்சில் வெளிப்படுத்த பிரத்யேக வலைப்பக்கங்களை அவை உருவாக்கி யுள்ளன. காலத்துக்கேற்ப கவர்ந்திழுக்கும் சின்னச் சின்ன வீடியோ டீஸர்களோடு பின்னி எடுக்கின்றன.
நம்மவர் ராகுல்
காங்கிரஸ் தளத்தில் (http://www.inc.in), 'நான் அல்ல, நாம்' என்ற வாசகத்துடன் டாக்டர் முதல் விவசாயி வரையிலான மாடல்களுடன் கைகட்டி கம்பீரமாக நிற்கிறார் ராகுல். ஒருபக்கம் காங்கிரஸின் சாதனைகளையும் வாக்குறுதிகளையும் வாரி இறைக்கும் இந்தத் தளம் மறுபக்கம் மோடி தன்னுடைய உரை களில் வெளியிடும் தவறான தகவல்களை அம்பலப்படுத்துவற்காகவே 'ஃபேக்ட் செக்' என்று ஒரு தனிப் பிரிவை வைத்திருக்கிறது.
"72 சதவீத வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக மோடி மேடைகளில் சொல்கிறார். ஆனால், குஜராத் அரசின் வேலைவாய்ப்பு செய்திகள் வலைதளத்தில், மொத்தம் 85,432 பேர் வேலைக்காக விண்ணப்பித்திருப்பதாகவும் அவர்களில் 578 பேருக்குத் தான் (அதாவது 0.7 சதவீதம்) வேலை கிடைத்துள்ளது என்றும் காட்டுகிறதே! அவரை நம்பலாமா?" என்கிறது ஒரு டீஸர்.
இன்னொரு டீஸர், "சீனா தனது ஜிடிபியில் 20% கல்விக்காகச் செலவழிக்கிறது" என்று சொல்லும் மோடியின் வீடியோவைப் போட்டு, "உண்மையில் சீனா கல்விக்காகச் செலவழிப்பது 3.98%; இந்தியா 4%. சொல்லுங்கள் அவரை நம்பலாமா?" என்று கேட்கிறது.
திருவாளர் மாற்றம் மோடி
மோஷன் கேப்சருக்கெல்லாம் சவால் விடும் வகையில் 3டி ப்ரொஜெக்ஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றி பேசி சாதனை படைத்த மோடி தரப்பினர் சும்மா விடுவார்களா?
பாஜக வலைத்தளத்தில் (http://www.bjp.org/) காங்கிரஸ் அரசின் தோல்விகள் என்று பல விஷயங்களை ஃப்ளாஷ் அனிமேஷன் முறையில் உருவாக்கி அசத்தியிருக்கின்றனர். பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஊழல், குற்றங்கள் என்று ஒவ்வொரு தலைப்பிலும் பத்தாண்டு கால காங்கிரஸ் அரசின் தோல்விகளைப் புட்டுப்புட்டு வைக்கின்றனர்.
பணவீக்கம் என்ற தலைப்பைச் சுட்டினால், '2004-ல் 3.6% ஆக இருந்த பணவீக்கம், 2013-ல் 10.9% உயர்ந்திருக்கிறது" என்கிறது. குற்றங்கள் எனும் தலைப்பைச் சுட்டினால், '2004-ல் 22,189 ஆக இருந்த 2012-ல் 31117 ஆக உயர்ந்திருக்கிறது' என்று சொல்கிறது. மோடி மந்த்ரா என்ற இணைப்பில் 'மோடி பிரதமரானால் புல்லட் வேக ரயில்கள் புழக்கத்துக்கு வரும்' போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள்.
இது தொழில்நுட்ப வல்லுநர்கள் காலம்
கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளும் இணைய தளங்களைப் பயன்படுத்துவதால் வித்தி யாசம் காட்ட வேண்டிய அவசியம் அந்த வலைத்தளங்களை உருவாக்குபவர்களுக்கு இருக்கிறது. அதேபோல், வெவ்வேறு வடிவங்களில் விதவிதமான விளம்பரங்களை உருவாக்கி வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டி உள்ளது.
இந்த வாய்ப்பைக் காட்சி ஊடகம், இணையம், இருபரிமாணம் மற்றும் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தேர்தல் வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்து கிறார்கள்.இளைஞர்களைக் கவர்ந்திழுக்க ஒரு சுவாரஸ்யமான போரை இணையத்தில் இவர்கள் நிகழ்த்துகிறார்கள்!