

பிகார் தலைநகர் பாட்னாவில் நரேந்திர மோடி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்ட பொதுக்கூட்டம் அருகே 6 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 83 பேர் காயமடைந்தனர்.
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, பாட்னா காந்தி மைதானத்தில் மதியம் 1 மணிக்கு பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இதையொட்டி, காந்தி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். மோடி வருவதற்கு முன்பாக, மதியம் 12.40 மணி அளவில் பலத்த சப்தத்துடன் பொதுக்கூட்டம் மைதானம் அருகே அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் மக்களிடையே பெரும் பீதி நிலவியது. எனினும், மோடியின் கூட்டம் திட்டமிட்டபடி 1 மணிக்கு தொடங்கியது.
இதற்கு முன்னதாகவே, காலை 10 மணி அளவில் பாட்னா ரயில் நிலையத்தின் 10-வது பிளாட்பாரத்தில் முதல் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். உடனடியாக ரயில் நிலையத்துக்கு விரைந்துச் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் அங்கிருந்து மேலும் 2 குண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர்.
இந்தச் சம்பவங்களில் 5 பேர் உயிழந்தனர், காயமடைந்த 80-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உளவுத் தகவல் இல்லை: நிதிஷ்
தொடர் குண்டுவெடிப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிகார் முதல்வர் நிதிஷ் குமார், குண்டுவெடிப்பு தொடர்பாக உளவுத் துறை தகவல் எதுவும் வரவில்லை என்றார்.
அதேநேரத்தில், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்துக்கு மாநில காவல் துறை உரிய பாதுகாப்பை அளித்ததாகக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சவால்களை எதிர்கொள்ள எதிர்கட்சிகளும் கைகோர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை செலவுகளும் தரப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
முன்னதாக, தொடர் குண்டுவெடிப்பை அடுத்து பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது 2 நாள் முங்கர் பயணத்தை ரத்து செய்துவிட்டு தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
பிரதமர் கண்டனம்
இந்தத் தொடர் குண்டுவெடிப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மோடி இரங்கல்
இந்தக் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்த மோடி, இந்தச் சம்பவம் எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ், பாஜக கண்டனம்
பாட்னா தொடர் குண்டுவெடிப்புக்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முழுமையான விசாரணையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் திக் விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பாட்னா தொடர் குண்டுவெடிப்பு, உளவுத் துறையின் ஒட்டுமொத்த தோல்வியையே காட்டுகிறது என பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
சதி வேலையில் 11 பேர் கும்பல்:
பாட்னா பீகார் தலைநகர் பாட்னா குண்டுவெடிப்பு சதிவேலையில் 11 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாட்னா ரயில் நிலையத்தில் குண்டுவெடித்தபோது சந்தேகத்துக்குரிய ஒரு நபர் தப்பியோட முயன்றார். அவரை போலீஸார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 11 பேர் கும்பல் குண்டுவெடிப்பு சதிவேலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. எந்த அமைப்பு தாக்குதலை நடத்தியது என்பதையும் கண்டுபிடித்துவிட்டோம். ஆனால் இப்போதைக்கு தகவல்களை வெளியிட முடியாது என்று பீகார் மாநில போலீஸார் தெரிவித்தனர்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், ‘பாட்னா குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.எஸ்.ஏ.) விசாரணை நடத்தும். குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்’ என்றார்.