

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியை ஜெயந்தி நடராஜன் ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார்.
ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். தமிழகத்தைச் சேர்ந்த இவர் 3 முறை ராஜ்ய சபா எம்.பி.யாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பதவியை ஜெயந்தி நடராஜன் ராஜிநாமா செய்ததை அடுத்து அவர் வகித்து வந்த வனம் மற்றும் சுற்றுச்சூழல் இலாகா மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக அவர் அமைச்சர் பதவியை ஜெயந்தி நடராஜன் ராஜிநாமா செய்துள்ளதாக தெரிகிறது.
ராஜிநாமா தொடரும்?
இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டும் மேலும் சில அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்யலாம் என்று கூறப்படுகிறது. ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளை திட்டமிடுவது தொடர்பான பணியில் அமர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தேர்தல் வியூகம்:
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடருக்குப் இன் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், சட்டமன்றத் தேர்தல் முடிவு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது என நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.