

உ.பியின் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் மூத்த துணைத்தலைவராக நடிகை ஜெயபிரதா நியமிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாதியில் இருந்து நீக்கப்பட்டவருக்கு அக்கட்சி ஆளும் அரசு சார்பில் மீண்டும் முக்கியப் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
உபி திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் துணத்தலைவர்களில் ஒருவராக சமீபத்தில் அமர்த்தப்பட்டிந்தவர் ஜெயபிரதா. இவரை அக்கழகத்தின் மூத்த துணைத்தலைவராக நியமித்து உபி முதல் அமைச்சர் அகிலேஷ்சிங் யாதவ் நேற்று உத்தரவிட்டுள்ளார். இக் கழகத்தின் தலைவராக உருது மொழி அறிஞரான டாக்டர்.கோபால் தாஸ் நீரஜ் உள்ளார். இதன் மூத்த துணைத்தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலமாக ஜெயப்பிரதாவிற்கு மீண்டும் சமாஜ்வாதியில் முன்பு போல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
உபியில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் மீண்டும் இணைந்த அமர்சிங்கின் நெருங்கிய சகாவாக இருப்பவர் நடிகை ஜெயப்பிரதா. இவரை அமர்சிங் சமாஜ்வாதியில் சேர்த்து உபியின் ராம்பூர் தொகுதியில் எம்பியாக போட்டியிட வைத்தார். இதில், வெற்றி பெற்று ராம்பூரில் தொடர்ந்து இருமுறை மக்களவை உறுப்பினராக ஜெயப்பிரதா பதவி வகித்தார். கடந்த 2010-ல் சமாஜ்வாதியில் இருந்து அமர்சிங் விலகிய போது அவருடன் சேர்ந்து தானும் வெளியேறினார். பிறகு, ’ராஷ்ட்ரிய லோக் மன்ச்’ எனும் பெயரில் தனியாக ஒரு கட்சியை துவக்கிய இருவரும் உபி சட்டப்பேரவை தேர்தலில் தம் வேட்பாளர்களை போட்டியிட வைத்து படுதோல்வியை சந்தித்தனர்.
கடந்த மக்களவை தேர்தலுக்கு சற்று முன்பாக தம் கட்சியை கலைத்தவர்கள், அஜீத்சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியில் இணைந்து மக்களவை தேர்தலில், உபி தொகுதிகளில் இருவரும் போட்டியிட்டனர். இதிலும் தோல்வி ஏற்பட, சமாஜ்வாதி கட்சியில் கடந்த வருடம் மீண்டும் இணைய முயற்சித்தனர். சமீபத்தில், சமாஜ்வாதியில் இணைந்த அமர்சிங்கிற்கு அக்கட்சி சார்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்தது. இவரது சிபாரிசின் பேரில், ஜெயபிரதா உபி திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் துணத்தலைவராக அமர்த்தப்பட்டிருந்தார். இப்போது மூத்த துணைத்தலைவராகவும் பதவி உயர் பெற்றுள்ளார்