

மராமத்து பணிகளாலும், கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகத்தை யொட்டியும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வரும் 4-ம் தேதி முதல், 8-ம் தேதி மதியம் 3 மணி வரை மூடப்படுவதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி பிரமராம்பிகா நேற்று ‘தி இந்து’வுக்கு பேட்டி அளித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
ஸ்ரீகிருஷ்ண தேவராயர் தனது போர் வெற்றிகளின் சின்னமாக கடந்த 1516-ம் ஆண்டு, வாயுஸ்தல மாக விளங்கும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலின் ராஜகோபுரத்தை கட்டினார். 136 அடி உயரமும், 7 நிலைகளையும் கொண்ட இந்த ராஜகோபுரம் சுவர்ணமுகி நதிக்கரையின் ஓரத்தில் மிக கம்பீரமாக காட்சியளித்து கொண் டிருந்தது. ஆனால் இந்த ராஜகோபுரம், கடந்த 2001-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி இரவு திடீரென சரிந்து தரை மட்டமாகியது. இதனை தொடர்ந்து இதே இடத்தில் ராஜகோபுரம் கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டது. ஆனால் இந்த கோபுரத்தை இலவசமாக கட்டித் தர நவயுகா எனும் தனியார் நிறுவனம் முன் வந்தது. இதனை தொடர்ந்து ரூ. 50 கோடி செலவில் இந்த கோபுரம் கட்டும் பணி முடிவடைந்து தற்போது கடந்த 26-ம் தேதி முதல் யாகசாலையில், பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
வரும் 8-ம் தேதி இதன் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி வரும் 4-ம் தேதி முதல் 8ம் தேதி மதியம் 3 மணி வரை மூலவர் சன்னதி நடை சாத்தப்படுகிறது. கும்பாபிஷே கத்தை தொடர்ந்து பக்தர்கள் 8-ம் தேதி முதல் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு பிரமராம்பிகா தெரிவித்தார்.