

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, காஷ்மீர் வன்முறை சம்பவங் களுக்கு பாகிஸ்தானின் தூண்டுதலே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டி உள்ளார்.
மாநிலங்களவையில், கேள்வி நேரத்தின்போது, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசும்போது, “பாஜக ஆளும் குஜராத்தில் தலித் மக்களுக்கு எதிராக சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதை போலீஸார் கண்டுகொள்ளவில்லை” என்று குற்றம்சாட்டினார். இதற்கிடையே அவரது கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று கூச்சல் போட்டதால், அவை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடியபோது, காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அவைத்தலைவர் அனுமதி அளித்தார்.
விவாதத்தை தொடங்கி வைத்து எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்) பேசும்போது, “காஷ்மீரில் தீவிர வாதத்தை ஒழிப்பது தொடர்பான நடவடிக்கையில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம்.
அதேநேரம், போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களுக்கு எதிராக அளவுக்கு அதிகமான படைகளை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. குறிப்பாக அவர்களை தீவிர வாதிகள் போல கருதி, குழந்தைகள், பெண்களுக்கு எதிராக துப்பாக்கிகள் பயன்படுத்தப்படு கின்றன. இதைத் தவிர்க்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் வகை யில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, “காஷ்மீரில் நடைபெறும் சம்பவங்கள் கவலை அளிப்பதாக உள்ளது. ஆனால், அம்மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுவதால்தான் வன்முறை நடைபெறுவதாக கூறுவதை ஏற்க முடியாது. அங்கு அமைதியை ஏற்படுத்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் நாட்டில் உள்ள அனைவரும் ஒரே குரலில் கருத்துகளை வெளிப் படுத்த வேண்டும். அங்குள்ள பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது” என்றார்.
மேலும் நரேஷ் அகர்வால் (சமாஜ்வாடி), விஜிலா சத்யானந்த் (அதிமுக), டெரிக் ஓ பிரியன் (திரிணமூல்), சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்) உள்ளிட்ட பலர் விவாதத்தில் பங்கேற்று பேசினர். அப்போது, போராட்டத்தின்போது பொதுமக்களுக்கு எதிராக பாது காப்புப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரி வித்தனர்.
இறுதியாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும் போது, “காஷ்மீரில் எந்த ஒரு வன் முறை சம்பவம் நடந்தாலும் அதற்கு பாகிஸ்தானின் தூண்டு தலே காரணம். அங்கு போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக பயங் கர ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர் மெகபூபா முப்தியை உடனுக்குடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். மேலும் இது விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடிக்குமாறு மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். அங்கு அமைதியை நிலைநாட்ட தேவையான உதவியை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.
இந்த விவகாரத்தில் எத்தகைய முடிவு எடுத்தாலும் அதுகுறித்து அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசனை நடத்தப்படும் என உறுதி அளிக்கிறேன்” என்றார்.