

6 மாதங்களுக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்ட நிறுவனங்கள் நிலக்கரிச் சுரங்கத்தில் மேற்கொண்டுள்ள பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 93-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 218 நிலக்கரி சுரங்க உரிமங்கள் வழங்கப்பட்டன. இவை முறைகேடாக வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த உரிமங்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி தீர்ப்பளித்தது.
இருப்பினும், இந்த உரிமங்களை ரத்து செய்வது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதன் இறுதித் தீர்ப்பை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் மதன் லோக்கூர், குரியன் ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு செப்டம்பர் 24-ல் வெளியிட்டது.
அதன்படி, 218 உரிமங்களில் 214 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. தனியாருடன் கூட்டணி இன்றி, அரசே நடத்தும் ‘செயில்’ மற்றும் ‘என்டிபிசி’ நிறுவனங்களுக்குச் சொந்தமான நான்கு உரிமங்கள் தொடர்ந்து செயல்பட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த நான்கு சுரங்கங்களில் இரண்டு மத்தியப் பிரதேசத்திலும், இரண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திலும் உள்ளன.
தற்போது செயல்பாட்டில் உள்ள 36 நிலக்கரி சுரங்கங்கள் 6 மாதங்களுக்குள் அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி இறுதி கெடுவாக விதிக்கப்பட்டுள்ளது. அதன்பின், இச்சுரங்கங்கள் மத்திய அரசின் கோல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
இந்நிலையில், இந்த நிறுவனங்கள் கெடு முடிவதற்குள் அதிகளவில் நிலக்கரியை வெட்டி எடுக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் அதிகப்படியாக நிலக்கரி வெட்டி எடுப்பதாகவும், எனவே இந்நிறுவங்கள் சுரங்கப் பணிகள் மேற்கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்திருந்தார். ஆனால், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, "மனுவில் குறிபிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் பணியை முடிக்க 6 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவரை அவர்கள் சுரங்கப் பணியில் ஈடுபடுவதை யாரும் தடுக்க முடியாது. கால அவகாசம் முடியாதபோது உச்ச நீதிமன்றம் ஏன் அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்" என தெரிவித்தது.