

இஸ்ரோவின் உலக சாதனை, இந்தியாவின் மற்றுமொரு பெருமிதத் தருணம் என்று மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் இந்திய விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிஎஸ்எல்வி - சி37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 9.28 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இதன்மூலம் 104 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உலக சாதனை நிகழ்த்தியது.
இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ''கார்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் 103 நேனோ செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி37 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்ரோவின் உலக சாதனை, இந்தியா மற்றும் நம் விண்வெளி அறிவியல் சமூகத்துக்கான மற்றுமொரு பெருமிதத் தருணம். நமது விஞ்ஞானிகளை இந்தியா தலைவணங்குகிறது.
விண்வெளித் துறை செயலரைத் தொடர்பு கொண்டு, அவரையும் ஒட்டுமொத்த விஞ்ஞானிகள் குழுவையும் பாராட்டினேன்'' என்று தெரிவித்துள்ளார்.