

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களிடம் ஆதரவு திரட்ட வரும் ஜூலை 4-ம் தேதி ஹைதராபாத் வருகிறார்.
பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களிடம் ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார். அதன்படி வரும் ஜூலை 4-ம் தேதி டெல்லியில் இருந்து அவர் ஹைதராபாத் வருகிறார். அவருடன் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் உடன் வருகிறார்.
ஹைதராபாத்தில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகிளன் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னை ஆதரிக்கும்படி கோரவுள்ளார்.
பின்னர் அன்று மதியம் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இதைத்தொடர்ந்து விஜயவாடா சென்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் சந்திக்கவுள்ளார்.
ராம்நாத் கோவிந்த் இன்று காஷ்மீர் சென்று அம்மாநில எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களிடம் ஆதரவு கோரவுள்ளார். அவருடன் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் உடன் செல்கிறார்.