

ராகுல் காந்தியை, தரக்குறைவாக விமர்சிப்பதை பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன திரிவேதி தெரிவித்தார்.
நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தியை தொடர்ந்து தரக்குறைவாக விமசர்சித்து வருகிறார். ராகுல் காந்தியோ அல்லது மற்ற காங்கிரஸ் தலைவர்களோ எப்படி மரியாதையுடன் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது மற்றவர்களும் அந்த மரியாதையை கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக அவர் கூறினார்.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் முசாபர்நகர் கலவரத்தை பற்றிய ராகுலின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர்: மதவாதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற வகையில் தான் ராகுல் பேசியிருந்தார். அவரது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
ராகுலின் பேச்சுக்கு பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து பாஜக தேர்தல் ஆணையத்திடம் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல்: வாக்குகளை பெறுவதற்காக மதவாதத்தை பாஜக வளர்த்து வருவதாகவும், பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார். இந்தப் பிரிவினைவாத அரசியலால் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு உதவி கிடைக்கிறது எனவும், முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களை ஐ.எஸ்.ஐ, அணுகுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.