

ஐபிசி24 என்ற தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் சுப்ரீத் கவுர் (28) தன் கணவன் விபத்தில் மரணமடைந்த செய்தியையே வாசிக்க நேர்ந்துள்ளது. அதாவது ஒரு விபத்து செய்தியை வாசிக்கிறார், அதில் அவர் கணவர் மரணமடைந்ததும் அவருக்குத் தெரிந்துள்ளது, இருப்பினும் துக்கத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் கடமையை செவ்வனே செய்துள்ளார் சுப்ரீத் கவுர்.
சத்திஸ்கர் மாநில ஐபிசி 24 என்ற சானலில் சுப்ரீத் கவுர் 2009-லிருந்து பணியாற்றி வருகிறார். இவருக்கும் கவாதே என்பவருக்கும் கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை 10 மணி செய்தியை வாசிக்க தொலைக்காட்சி நிலையத்துக்கு வந்து செய்தி வாசித்துள்ளார் சுப்ரீத் கவுர். அப்போது மஹாசமந்த் மாவட்ட ரிப்போர்ட்டர் தனஞ்சய் திரிபாதி விபத்துச் செய்தி ஒன்றை உடனடியாக ஒளிபரப்பக் கோரி இவரை அழைத்தார்.
“ரிப்போர்ட்டர் விபத்துக்குள்ளான கார் எண்-ஐ தெரிவிக்கும் வரையில் அந்த விபத்தில் மரணமடைந்தது தன் கணவர்தான் என்பது கவுருக்குத் தெரியவில்லை. ஆனால் வண்டி எண்-ஐக் கூறியதும் தன் கணவர் இறந்து விட்டார் என்று தெரிந்தும் அவர் அந்தச் செய்தி தொகுப்பை முழுதும் வாசித்து விட்டு ஸ்டூடியோவை விட்டு கிளம்பும் போது வெடித்து அழுது விட்டார்” என்று தெஹ்சின் ஸைதி என்ற கவுரின் சக ஊழியர் தெரிவித்தார்.
அதிகாலை விபத்தில் 3 பேர் மரணமடைந்தனர். அதில் செய்தி வாசிப்பாளர் கவுரின் கணவர் கவாதேயும் ஒருவர். இந்தச் சம்பவம் செய்தி சேனல் ஊழியர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.