

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அளித்த பதில் வருமாறு:
மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை - மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட்:
நாட்டில் உள்ள சுமார் 2.68 கோடி மாற்றுத் திறனாளிகளுக்கும் (2011 நிலவரப்படி) ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு வசதியைப் பெற இது உதவியாக இருக்கும்.
தகுதியற்றவர்களால் நீண்ட வரிசை- மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்:
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது (நவம்பர் 8 முதல் டிசம்பர் 30 வரை) வெளிநாடுகளுக்கு சென்றிருந்தவர்கள் மட்டும் ரிசர்வ் வங்கிக் கிளைகளில் வரும் 31-ம் தேதி வரை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தகுதி அற்ற பலரும் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டுள்ளதால் நீண்ட வரிசை காணப்படுகிறது.
ஐஎஸ் தீவிரவாதம் தொடர்பாக 19 வழக்குகள்- மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஜி ஆஹிர்:
ஐஎஸ் தீவிரவாத செயல்பாடு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) 19 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில் 11 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் காணாமல் போன 22 பேர் ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு பயணம் செய்தது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஐஎஸ் அமைப்பு இணையதளம் மூலம் இந்தியாவில் ஆள் சேர்க்கிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது.
காஷ்மீரில் மீண்டும் பெல்லட் குண்டு: மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஜி ஆஹிர்:
காஷ்மீரில் போராட்டக்காரர்களை களைப்பதற்காக பெல்லட் குண்டுகளுக்கு பதில் எதைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதன்படி, பாவா சில்லி, ஸ்டன் லாக் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பலன் கிடைக்காவிட்டால் பெல்லட் குண்டுகளே பயன்படுத்தப்படும்.
வெளிநாட்டு நிதி பெறும் 25,000 என்ஜிஓக்கள்- மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு:
உள்துறை அமைச்சகத்திடம் உள்ள புள்ளிவிவரப்படி, பள்ளிகள், மதரஸாக்கள் உட்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறுகின்றன.