புலந்த்சாஹர் பலாத்கார சம்பவம்: தேடப்பட்ட முக்கிய நபர் கைது

புலந்த்சாஹர் பலாத்கார சம்பவம்: தேடப்பட்ட முக்கிய நபர் கைது
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் தாய், மகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேச போலீஸ் டிஜிபி தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நபர் சலீம் பவாரியா. இவர் ராஜஸ்தானில் சமூக விரோத செயல்களைச் செய்யும் கும்பலின் தலைவர்.

உத்தரப் பிரதேச மாநில சிறப்பு அதிரடிப் படைப் பிரிவைச் சேர்ந்த போலீஸார் மீரட் நகரில் பதுங்கியிருந்த சலீமை கைது செய்துள்ளனர். சலீம் கொடுத்த தகவலின் பேரில் ஜூபைர், சாஜித் சமாரியா ஆகிய மேலும் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

புலந்த்சாஹர் சம்பவம் தொடர்பாக மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தேடப்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணையில் குற்றத்தை சலீமும் அவரது கூட்டாளிகளும் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.

இதற்கிடையில், பலாத்காரம் செய்யப்பட்ட தாயும், மகளும் நீதிபதியின் முன் வாக்குமூலம் அளிக்க கால அவகாசம் கோரியுள்ளனர்.

பலாத்கார கொடூரம்:

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த குடும்பத்தினர் கடந்த வாரம் தங்களது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஷாஜஹான்பூருக்கு காரில் சென்றனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் டெல்லி கான்பூர் நெடுஞ்சாலையில் புலந்த்சாஹர் என்ற இடத்தில் அவர்களது காரை கொள்ளை கும்பல் வழிமறித்தது.

பின்னர் காரில் இருந்த இரு ஆண்களை கயிற்றால் கட்டிவிட்டு, தாயையும் (35) அவரது 14 வயது மகளையும் ஆள் இல்லாத பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in