Last Updated : 16 Apr, 2017 11:36 AM

 

Published : 16 Apr 2017 11:36 AM
Last Updated : 16 Apr 2017 11:36 AM

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் அருகே ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன

உத்தரபிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் 2 பயணிகள் காயம் அடைந்தனர்.

உத்தரபிரதேசத்தில் மீரட்டில் இருந்து தலைநகர் லக்னோவுக்கு ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. ராம்பூர் அருகே ரயில் செல்லும் போது திடீரென 8 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. முண்டாபாண்டே ராம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து நடந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.

இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் நீரஜ் சர்மா கூறும்போது, ‘‘ரயில் பெட்டிகள் தடம்புரண்டதில் பயணிகள் 2 பேர் மட்டும் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிரிழப்பு ஏதும் இல்லை’’ என்று உறுதிப்படுத்தினார்.

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறும்போது, ‘‘காயம் அடைந்த 2 பயணிகளுக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி அளிக்கப்படும். விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகளை, மொராதாபாத் மண்டல ரயில்வே மேலாளர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

சதி காரணமா?

ராஜ்ய ராணி ரயில் விபத்துக்கு சதி காரணமாக இருக்கலாம் என ரயில்வே வட்டாரங்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றன.

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி தான் நவீன முறையில் தண்டவாளம் பரிசோதிக்கப்பட்டது.

அப்போது தண்டவாளம் நன்றாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதை வைத்து பார்க்கும்போது ரயிலை கவிழ்க்கும் நோக்கத்துடன் மர்ம நபர்கள் தண்டவாளத்தை சேதப்படுத்தி இருக்ககூடும் என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் விபத்து நடந்த பகுதியில் 3 அடி தொலைவுக்கு தண்டவாளப் பகுதிகள் மாயமாகியுள்ளன. தவிர ராஜ்ய ராணி விரைவு ரயில் செல்வதற்கு முன் அதே தண்டவாளத்தில் 5 ரயில்கள் கடந்து சென்றுள்ளன. அந்த ரயில்களின் ஓட்டுநர்களும், தண்டவாளம் குறித்து எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x