

காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் பலியான ராணுவ அதிகாரி ஹங்பன் ததாவுக்கு மரணத்துக்கு பிந்தைய அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.
டெல்லியில் நேற்று நடந்த குடியரசு தினவிழாவில், வீரதீரத் துக்காக வழங்கப்படும் மிக உயரிய இந்த விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து ஹங்பன் ததாவின் மனைவி சாசென் லோவங் பெற்றுக்கொண்டார்.
இந்திய ராணுவத்தின் அசாம் ரெஜிமென்டில் பணியாற்றினார் ஹவில்தார் ஹங்பன் ததா. இந்நிலையில், கடந்த ஆண்டு மே 26-ம் தேதி இரவு காஷ்மீர் மாநிலம் நவ்காம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இவர், தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்டார்.
இதையடுத்து, ததா தலைமையிலான வீரர்கள் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். 24 மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும் தன்னுடன் நேரடியாக கைகலப்பில் ஈடுபட்ட மற்றொரு தீவிரவாதியையும் ததா கொன்றார். எனினும், 4-வது தீவிரவாதி சுட்டதில் படுகாயமடைந்த ததா பரிதாபமாக பலியானார். அதேநேரம் அந்தத் தீவிரவாதியை சக வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.