

பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் 5 விமான சேவை நிறுவனங்கள் விரைவில் பிராந்திய இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2,500க்கு விமானப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அறிமுகம் செய்யவிருக்கின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட 128 மார்க்கங்களில் நாடு முழுதும் 70 விமான நிலையங்களை இணைக்கும் திட்டத்தில் 1 மணி நேர பயணத்திற்கு விமானக் கட்டணம் ரூ.2,500 மட்டுமே.
5 விமான சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு மார்க்கங்களின் பட்டியலை அனுப்பியுள்ளது.
“பிராந்திய இணைப்பு விமானச் சேவை திட்டத்தின் கீழ் 44 புதிய நகரங்களைச் சேர்த்துள்ளோம். முன்பு விமானப்பயணம் பணக்காரர்களுக்கானதாக இருந்தது தற்போது சாமானிய மக்களும் பயணம் செய்யுமாறு கட்டணம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று சிவில் ஏவியேஷன் அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்தார்.
ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா சப்சிடியரி அலையன்ஸ் ஏர், டர்போ மெகா ஏர்வேஸ், ஏர் டெக்கான் மற்றும் ஏர் ஒடிசா ஆகிய நிறுவனங்கள் இந்த குறைந்த கட்டண சேவைக்கான அனுமதி பெற்றுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் முதல் விமானச் சேவை ஏப்ரல் மாதத்தில் தொடங்கலாம் என்று விமானப்போக்குவரத்து துறை செயலர் ஆர்.என்.சவ்பே தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் பாத்திந்தா, சிம்லா, ஆக்ரா, பிகானர், குவாலியர், கடப்பா, லூதியானா, நாந்தெத், பதான்கோட், வித்யா நகர், அந்தால், பர்ன்பூர், கூச்பேஹார், ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா, பவ்நகர், டையு, ஜாம்நகர் ஆதம்பூர், கண்ட்லா கான்பூர் மற்றும் பல ஊர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
விமான நிறுவனங்களுக்கு இந்தக் குறைந்த கட்டணத்தினால் ஏற்படும் இழப்பிற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.